கோத்தகிரி அருகே துப்பாக்கியால் சுட்டு தொழில் அதிபர் தற்கொலை

துப்பாக்கியால் சுட்டு தொழில் அதிபர் தற்கொலை செய்துகொண்டார். அவர் கந்துவட்டி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-11-23 06:30 GMT
கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரவேனு தின்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் பெள்ளிராஜ் (வயது 80). தொழில் அதிபர். இவருடைய மனைவி மீனாட்சி (70). இவர்களுக்கு பிரேமா (54), சித்ரா (52), ஹேமா (46) ஆகிய 3 மகள்களும், சுரேஷ் (50) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

மகள்கள் 3 பேரும் திருமணம் முடிந்து தின்னியூரில் தனித்தனியாக வசித்து வருகிறார்கள். பெள்ளிராஜ் தனது மனைவி, மகன் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

பெள்ளிராஜூக்கு கோத்தகிரி பகுதியில் தேயிலை எஸ்டேட், தொழிற்சாலைகள், திருமண மண்டபம், கேத்தரின் நீர்வீழ்ச்சி அருகே விடுதி, ஆங்கில வழி பள்ளிக்கூடம் என ஏராளமான சொத்துகள் உள்ளன. அவர் வசிப்பது பெரிய அளவிலான பங்களா வீடு. பெள்ளிராஜ் தினமும் காலை 6 மணிக்கு எழுந்து, நடைபயிற்சி செல்லும் பழக்கம் உடையவர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வழக்கம்போல் எழுந்து நடைபயிற்சிக்கு சென்றார். பின்னர் காலை 7 மணியளவில் வீட்டுக்கு வந்தவர், தனது அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டார். பின்னர் சிறிது நேரத்தில், அவரது அறையில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.
இதனால் பதறி போன வீட்டில் இருந்த அவரது மனைவி, மகன், மருமகள், வேலையாட்கள் என அனைவரும் அந்த அறைக்கு ஓடிச் சென்று பார்த்தனர். அங்கு பெள்ளிராஜின் கையில் கைத்துப்பாக்கியும், மற்றொரு கையில் செல்போனும் இருந்தது. தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதுபற்றி உடனடியாக கோத்தகிரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் பெள்ளிராஜ் இறந்த தகவல் அறிந்ததும் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அவரது பங்களா முன்பு திரண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பெள்ளிராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஊட்டியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் துப்பாக்கி மற்றும் அறையில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ் கூறியதாவது:-
பெள்ளிராஜ் கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை கொண்டது தெரியவந்துள்ளது. அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து மாலை 6 மணிக்குள் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால் கோவைக்கு அனுப்பி வைத்துள்ளோம். மேலும், அவர் தற்கொலைக்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கிக்கு உரிமம் உள்ளது.

அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. கைத்துப்பாக்கி மற்றும் செல்போனை கைப்பற்றி உள்ளோம். மேலும், அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பெள்ளிராஜ் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது உறவினர்கள் கூறும்போது, சில நாட்களாக பெள்ளிராஜூக்கு தொழில் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்தது. இதன் காரணமாக அவர் கடந்த 4 நாட்களாக வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் மனஉளைச்சலுடன் காணப்பட்டார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று நாங்கள் கூறி வந்தோம். இருப்பினும் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றனர்.

நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் போராட்டக்குழு தலைவர் பி.எஸ்.பெல்லன் கூறியதாவது:- தொழில் அதிபர் பெள்ளி ராஜூக்கு கோத்தகிரியில் மட்டும் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. அவருக்கு தொழில் ரீதியாக சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் ஏற்பட்டது. அதற்காக அவர் நடத்தி வந்த ஆங்கிலப்பள்ளியில் உள்ள பெரும்பாலான பங்குகளை கோவையை சேர்ந்த ஒருவருக்கு விற்றுவிட்டார்.

இந்த நிலையில் அவர் தொழில் தொடர்பாக கந்துவட்டிக்கு பணம் வாங்கியதாக தெரிகிறது. ஈரோட்டை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன்பு பெள்ளிராஜூக்கு மிரட்டல் விடுத்துச்சென்று உள்ளார். இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து இருக்கலாம். எனவே இதுகுறித்த தகுந்த ஆதாரங்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து புகார் அளிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்