தானேயில் வீட்டில் திருட முயன்ற வாலிபர் அடித்து கொலை தந்தை, மகன் உள்பட 4 பேர் கைது

வீட்டில் திருட முயன்ற வாலிபரை அடித்து கொலை செய்த தந்தை, மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-11-22 21:56 GMT

தானே,

வீட்டில் திருட முயன்ற வாலிபரை அடித்து கொலை செய்த தந்தை, மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வீட்டில் புகுந்த வாலிபர்

தானே அருகே கல்வா போத்பாடா குடிசை பகுதியை சேர்ந்தவர் கங்கன் யாதவ் (வயது52). இவரது மகன் ராஜேந்திரா(25). இவர்கள் சம்பவத்தன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திருடும் முயற்சியில் வாலிபர் ஒருவர் அவர்களது வீட்டுக்குள் புகுந்தார்.

சத்தம்கேட்டு தந்தை, மகன் இருவரும் கண்விழித்தனர். இதை பார்த்ததும் பயந்துபோன வாலிபர் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக வீட்டின் மேல் தளத்தில் ஏறி உள்ளார்.

இருட்டில் கண் தெரியாமல் மேலே படுத்திருந்த ஒருவர் மீது மிதித்து விட்டார். இதனால் திடுக்கிட்டு எழுந்த அவர் திருடன்...திருடன்... என சத்தம் போட்டார்.

அடித்து கொலை

உடனே அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் அந்த வாலிபர் மேல்தளத்தில் இருந்து கீழே குதித்தார். இதில், காயமடைந்த அவரை கங்கன் யாதவ், ராஜேந்திரா மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்து சரமாரியாக தாக்கினார்கள். தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அந்த வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில் அந்த வாலிபர் பெயர் சத்ருகன் (20) என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை தாக்கிய கங்கன் யாதவ், ராஜேந்திரா, பஞ்சால்(26), தயாசங்கர்(39) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்