அரசு ஊழியர் மீது வெடிகுண்டு வீசிய 4 பேர் கைது

அரசு ஊழியர் மீது வெடிகுண்டு வீசிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-11-22 23:45 GMT

புதுச்சேரி,

புதுவை மேட்டுப்பாளையம் சொக்கநாதன்பேட்டை அணைக்கரை வீதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 33). அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஊழியர். இவரது வீட்டுத் தெருவில் கடந்த 19–ந் தேதி இரவு தமிழ்மணி தனது நண்பர்கள் 2 பேருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார். இதுகுறித்து கேட்டபோது பெருமாளுடன் வாக்குவாதம் செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

இதன்பிறகு தமிழ்மணி தனது நண்பர்களான ஸ்டீபன், லட்சுமணன், தமிழ்வாணன், தரணி ஆகியோருடன் மறுநாள் (20–ந் தேதி) மாலை சொக்கநாதன்பேட் பகுதிக்கு சென்றனர். அங்கு இருந்த பெருமாளை தாக்க முயன்ற போது அவர் தப்பி ஓடினார். உடனே அந்த கும்பல் பெருமாள் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது. அந்த குண்டு தரையில் விழுந்து வெடித்து சிதறியதில் அந்த பகுதியை சேர்ந்த 6–ம் வகுப்பு மாணவி சுவேதா காயம் அடைந்தாள்.

இது குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்–இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல்–அமைச்சர் நாராயணசாமி, டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் ஆகியோரும் அங்கு சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

இந்தநிலையில் குற்றவாளிகள் காலாப்பட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து கோரிமேடு போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற குற்றவாளிகளை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதில் திலாஸ்பேட்டை லட்சுமணன்(வயது 25), வாணரப்பேட்டை ஸ்டீபன் என்ற ஸ்டீபன்ராஜ் (24), மூலக்குளம் தமிழ்வாணன் என்ற தமிழ்(25), சொக்கநாதன் பேட்டை தமிழ்மணி என்ற தமிழ்(21) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 2 கத்திகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய லாஸ்பேட்டையைச் சேர்ந்த தரணி என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்