சேலம் அரசு ஆஸ்பத்திரி எதிரே சாக்கடை கால்வாயில் விழுந்து விடிய, விடிய தவித்த முதியவர்

சேலம் அரசு ஆஸ்பத்திரி எதிரே சாக்கடை கால்வாயில் விழுந்து விடிய, விடிய தவித்த முதியவரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

Update: 2017-11-22 23:00 GMT
சேலம்,

சேலம் அரசு ஆஸ்பத்திரி எதிரே தலைவெட்டி முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பகுதியில் திறந்த நிலையில் சாக்கடை கால்வாய் செல்கிறது. நேற்று காலை இந்த கோவிலுக்கு பக்தர்கள் சிலர் சென்றனர். அப்போது சாக்கடை கால்வாயில் இருந்து சத்தம் கேட்டது. உடனே, பக்தர்கள் சாக்கடை கால்வாய்க்குள் எட்டிப்பார்த்தனர்.

அப்போது சுமார் 65 வயதுடைய முதியவர் 10 அடி ஆழமுள்ள அந்த சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரை மீட்டு வெளியே கொண்டு வர முயன்றனர். ஆனால், கால்வாய் ஆழமாக இருந்ததால் அவர்களால் உடனே மீட்க முடியவில்லை.

இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் உள்ளே இறங்கி, முதியவரின் இடுப்பில் கயிறு கட்டி மேலே தூக்கி மீட்டனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

சாக்கடை கால்வாயில் விடிய, விடிய தவித்ததால் முதியவரின் உடல்நிலை மோசமடைந்தது. இதனால் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மயக்க நிலையில் இருந்ததால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. மேலும் இதுதொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க திறந்தவெளியில் உள்ள சாக்கடை கால்வாய்களை சிலாப்புகளால் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்