கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் 350 பேர் கைது

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் 350 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-11-22 23:00 GMT
நெல்லை,

நெல்லை பேட்டையை சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் சந்திரசேகர் உள்பட 3 பேர் மீது பொய்யான புகார் கொடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு காரணமாக இருந்த அரசு கேபிள் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழகம் முழுவதும் இருந்து கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர்.

கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்க மாநில தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கி, போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பொய்யான புகார் கொடுத்த தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 பேர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த முற்றுகை போராட்டத்தையொட்டி மேலப்பாளையம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் வேல்கனி, காளியப்பன், சத்தியவாணிமுத்து ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் 350 பேரையும் போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி சென்று அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

மேலும் செய்திகள்