மடத்துக்குளம் அருகே கோழிப்பண்ணைக்கு செல்லும் வழியில் பள்ளம் தோண்டி போராட்டம்

மடத்துக்குளம் அருகே தனியார் கோழிப்பண்ணையால் ஈக்கள் தொல்லை அதிகம் அளவில் உள்ளது. இதனால் கோழிப்பண்ணை செல்லும் வழியில் பள்ளம் தோண்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-11-22 21:30 GMT

மடத்துக்குளம்,

மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஏராளமான கோழிப்பண்ணைகள் உள்ளது. இதில் மடத்துக்குளத்தை அடுத்த துங்காவி பகுதியில் 5–க்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோழிப்பண்ணைகள் சுகாதார பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுவதோடு, ஈக்கள் தொல்லையும் அதிகரித்து இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து அரசுத்துறைகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் நேற்று தனியார் கோழிப்பண்ணைகளின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் கோழிப்பண்ணைக்கு செல்லும் வழியில் பள்ளம் தோண்டி, வாகனங்கள் மற்றும் ஊழியர்கள் செல்ல முடியாமல் தடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில் ‘‘கோழிப்பண்ணைகள் முறையாக பராமரிக்கப்படாமல் சுகாதார சீர்கேடுகளை ஏற்படும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஈக்கள் உற்பத்தி அதிகரித்து கடும் தொல்லை தருகிறது. கோழிப்பண்ணைகளிலிருந்து கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் ஈக்கள் உணவுப்பொருட்களின் மீது அமர்வதால் பல நோய்கள் பரவுகிறது.

மேலும் ஈக்கள் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் குடிநீருக்குள் விழுந்து விடுகிறது. இதனால் அருவெறுப்படைவதுடன் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கோழிப்பண்ணைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சுகாதார சீர்கேடுகளை களைய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்