மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த தொழிலாளர்கள்

அமராவதி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு தொழிலாளர்கள் திரண்டு வந்தனர்.

Update: 2017-11-22 22:45 GMT
கரூர்,

கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆறுகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளி வருபவர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தாகவும், மணல் அள்ள அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் கோவிந்தராஜிடம் மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் மீண்டும் மனு கொடுப்பதற்காக ஆண்டாங்கோவில், சோமூர், கருப்பம்பாளையம், சுக்காலியூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

அனுமதி

கலெக்டர் கோவிந்தராஜ் அலுவலகத்தில் இல்லாததால் கலெக்டர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் முறையிட்டனர். அப்போது அதிகாரிகள் கலெக்டர் இல்லாததால், வந்ததும் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதுகுறித்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் கூறுகையில், “அமராவதி ஆற்றில் மணல் அள்ள அனுமதி குறித்து ஒருவார காலத்தில் தெரிவிப்பதாக கலெக்டர் தெரிவித்திருந்தார். அதனால் ஏற்கனவே மனு கொடுத்ததற்கான நடவடிக்கை குறித்து கேட்டறியவும், மேலும் கோரிக்கை தொடர்பாக மனு கொடுத்து வலியுறுத்தவும் கலெக்டர் அலுவலகம் வந்தோம் என்றனர். பின்னர் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்