பீடி தொழிலாளர்கள் வீடு கட்ட ரூ.1½ லட்சம் மானியம்
வேலூர் மாவட்டத்தில் உள்ள பீடி தொழிலாளர்கள் வீடுகட்டுவதற்கு ரூ.1½ லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
வேலூர்,
இந்த மானியம் 3 கட்டங்களாக அதாவது முதல் கட்டமாக ரூ.37,500, இரண்டாவது கட்டமாக ரூ.90 ஆயிரம், 3–வது கட்டமாக ரூ.22,500 வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசின் பீடி தொழிலாளர் நல மருந்தகத்தின் மருத்துவ அதிகாரி கே.உஷாராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மத்திய அரசு தொழிலாளர் நல அமைச்சகத்தின் பீடி தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1½ லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மானியம் பெறுவதற்கு குறைந்தபட்சம் ஒரு வருடம் பீடி தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும். வீடு இல்லாத தொழிலாளர்கள் அல்லது அவர்களுடைய கணவர் பெயரில் உள்ள மனையில் வீடுகட்டிக்கொள்ள மானியம் பெற்றுக்கொள்ளலாம்.இதற்கான விண்ணப்பம் பெறுவதற்கும், இந்த திட்டம் குறித்து தெரிந்துகொள்ளவும் அருகில் உள்ள பீடி தொழிலாளர் நல மருந்தகத்தினை அணுகலாம். மேலும் வேலூர் சத்துவாச்சாரி வள்ளலாரில் அமைந்துள்ள வீட்டு வசதிவாரியத்தில் உள்ள பீடி தொழிலாளர் நல மருந்தக மருத்துவ அதிகாரியை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.