பாதாள சாக்கடைக்கு குழி தோண்டிய போது குடிநீர் குழாய் உடைப்பு

திருப்பத்தூரில் பாதாள சாக்கடைக்கு குழி தோண்டிய போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பொக்லைன் எந்திரம் சிறைபிடிக்கப்பட்டது.

Update: 2017-11-22 22:30 GMT

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் நகராட்சியில் ரூ.125 கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று 25–வது வார்டு பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் பாதாள சாக்கடைக்காக பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டிய போது, கவுதமபேட்டை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் மெயின் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனால் அந்த தொட்டிக்கு செல்லும் குடிநீர் வீணானது.

அதனை கண்டு அப்பகுதி மக்கள் அங்கு வந்தனர். அதற்குள் பொக்லைன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள், குடிநீர் குழாயை உடனடியாக சரிசெய்து தருவதாக கூறினர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.


மேலும் செய்திகள்