செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வது கடினம்

பூமியில் உள்ள அனைத்து நிலப்பரப்புகளையும் மனிதன் கண்டுபிடித்து குடியேறி விட்டான். அடுத்து செவ்வாய் கிரகத்தில் மனிதனால் வாழ முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

Update: 2017-11-22 09:00 GMT
பூமியில் உள்ள அனைத்து நிலப்பரப்புகளையும் மனிதன் கண்டுபிடித்து குடியேறி விட்டான். அடுத்து செவ்வாய் கிரகத்தில் மனிதனால் வாழ முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதனால், மனிதனை செவ்வாய் கிரகத்தில் குடியேற வைக்க தீவிர ஆய்வுகள் நடந்து வருகின்றன.

அழகான இந்த பூமியை மனிதன் முடிந்தவரை பாழாக்கி விட்டான். இப்போது இந்த பூமியைவிட்டு முழுமையாக வாழத் தகுதியில்லாத செவ்வாய் கிரகத்தில் குடியேறப் போகிறானாம். ஆயிரம் அற்புதங்களோடு உருவாக்கப்பட்ட, வாழ்வதற்கு அனைத்து தகுதியும் கொண்ட பூமியை தனது பேராசையால் சீரழித்துவிட்டு, இப்போது எந்த வசதியும் இல்லாமல் பாலை வனமாக காட்சியளிக் கும் செவ்வாய் கிரகத்தில் குடியேறப் போகிறானாம். அதற்கான வசதிகளை உருவாக்கப்போகிறானாம். இது கேலிக்கூத்தாக இருக்கிறது என்கிறார்கள், சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்.

செவ்வாய் கிரகத்தில் குடியேறினால் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவன் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகக்கூடும். அங்கு உயிர் வாழ்வது கடினம் என்று ரஷிய விஞ்ஞானி கூறுகிறார். மாஸ்கோவில் உள்ள இயற்பியல் தொழில்நுட்ப கல்வி மையத்தின் பேராசிரியர் எவ்ஜினி நிகாலோங் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்றது போல் மனிதனின் உடல் அமைப்புகள் செயல்படுகின்றன. இந்த ஈர்ப்பு விசைக்கு தகுந்த மாதிரி நோய் எதிர்ப்பு சக்திகளும் உடலில் உருவாகின்றன. ஆனால், செவ்வாய் கிரகத்தில் ஈர்ப்பு சக்தி வேறு மாதிரி இருக்கும். எனவே, மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி மறைந்து விடும். இதன் மூலம் பல்வேறு நோய்களை சந்திப்பான். அங்கு வாழ்வது கடினம். விண்வெளியில் ஈர்ப்பு சக்தி இல்லாமல் உள்ளது. விண்வெளி ஓடத்தில் 6 மாதம் வரை தங்கி இருந்த 18 ரஷிய விண்வெளி வீரர்களை ஆய்வு செய்தபோது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருந்தது. சாதாரண சூழ்நிலையில் கூட நோய் கிருமி தாக்குதலுக்கு ஆளானார்கள். இதே போல்தான் செவ்வாய் கிரகத்துக்கு மனிதன் சென்றாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பது அவரது கருத்தாகும்.

மேலும் செய்திகள்