கார் மோதி வாலிபர் சாவு; நண்பர் கவலைக்கிடம் உயிருக்கு போராடியவருக்கு உதவாமல் செல்போனில் படம் பிடித்த அவலம்

மோட்டார் சைக்கிளில் சென்ற போது கார் மோதியதில் படுகாயமடைந்த வாலிபர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த அவரது நண்பர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2017-11-21 21:23 GMT
கோலார் தங்கவயல்,

மோட்டார் சைக்கிளில் சென்ற போது கார் மோதியதில் படுகாயமடைந்த வாலிபர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த அவரது நண்பர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடியவரை காப்பாற்றாமல் செல்போனில் படம் பிடித்த அவலம் நடந்துள்ளது.

கார் மோதி ஒருவர் சாவு

கோலார் தங்கவயலை அடுத்த பங்காருபேட்டை மெயின்ரோடு பெங்கனூர் அருகே நேற்று மாலை 5 மணி அளவில் 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஒருவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இந்த விபத்தை நேரில் பார்த்ததும் அங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடினர். ஆனால் அவர்கள் யாரும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவருக்கு உதவாமல், அவர் உயிருக்கு போராடிய காட்சிகளை செல்போனில் படம் பிடிப்பதிலேயே குறியாக இருந்தனர். இதனால் படுகாயமடைந்த வாலிபர் சுமார் 15 நிமிடங்கள் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

மனிதநேயமற்ற செயல்

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் நேற்று கன்னட செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. விபத்தில் சிக்கியவருக்கு உதவாமல் செல்போனில் படம் பிடிப்பதிலேயே குறியாக இருந்த செயல், மனிதநேயமற்ற செயல் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் விபத்து பற்றி தகவல் அறிந்ததும் பங்காருபேட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக கோலார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

டிரைவருக்கு வலைவீச்சு

போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியானவர் கோலார் தங்கவயல் பி.இ.எம்.எல். நகர் அருகே தாசரஒசஹள்ளியை சேர்ந்த ஜார்ஜ் அலியாஸ் சுதீப் (வயது 19) என்பதும், படுகாயமடைந்தவர் அவரது நண்பர் ஸ்ரீகாந்த் (19) என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக பங்காருபேட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிய காரையும், அதன் டிரைவரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்