கொலை மிரட்டல் எதிரொலி: பெங்களூருவில் நடிகை தீபிகா படுகோனே வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

‘பத்மாவதி‘ படத்தில் நடித்ததால் நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2017-11-21 21:30 GMT

பெங்களூரு,

‘பத்மாவதி‘ படத்தில் நடித்ததால் நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தலைக்கு ரூ.10 கோடி அறிவிப்பு

ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து இந்தி மொழியில் தயாரான ‘பத்மாவதி‘ என்ற படத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். இதில் பத்மினி வேடத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்த படத்தில் ராஜபுத்ர மன்னனை திருமணம் செய்த தீபிகா படுகோனே டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி மீது காதல் வயப்படுவது போல் நடித்து இருப்பதாகவும், ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி பா.ஜனதா, ராஜபுத்ர சேனா, கர்னி சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தீபிகா படுகோனேவின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. இந்த நிலையில், படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே மற்றும் பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்தனர். அரியானா மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் ஒருவர், அந்த தொகையை உயர்த்தி தீபிகா படுகோனே, சஞ்சய் லீலா பன்சாலி தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி அறிவித்துள்ளார். இந்த படம் வெளியாவதை தள்ளிவைத்த பிறகும் அவருக்கு அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன.

கண்டனம்

இந்த மிரட்டல்களால் நடிகை தீபிகா படுகோனே அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் படப்பிடிப்புகளில் பங்கேற்பதை ஒத்திவைத்துள்ளார். விழாக்களில் பங்கேற்பதையும் ரத்துசெய்து விட்டார். நடிகை தீபிகா படுகோனேவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். முதல்–மந்திரி சித்தராமையா, போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி மற்றும் மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

‘நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா, அரியானா முதல்–மந்திரி மனோகர்லால் கட்டாரிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், பெங்களூரு உள்பட கர்நாடகத்தின் பிற பகுதிகளுக்கு நடிகை தீபிகா படுகோனே வரும்போது அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். அவருடைய குடும்பத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி கூறினார். மேலும், பெங்களூருவில் உள்ள நடிகை தீபிகா படுகோனேவின் குடும்பத்தினர் வசிக்கும் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி அவர் கர்நாடக போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார்.

போலீஸ் பாதுகாப்பு

இதன் தொடர்ச்சியாக, பெங்களூரு ஜே.சி.நகர் நந்திதுர்கா ரோட்டில் உள்ள தீபிகா படுகோனேவின் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த வீட்டில் தீபிகா படுகோனேவின் தந்தை பிரகாஷ் படுகோனே, தாய் உஜ்வாலா, சகோதரி அனிஷா ஆகியோர் வசித்து வருகிறார்கள். இங்கு, 4 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதேபோல், மல்லேசுவரத்தில் உள்ள தீபிகா படுகோனேவின் பாட்டி வசித்து வரும் வீட்டுக்கும் 2 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்