குமராட்சி அருகே குடிநீர் தொட்டி அமைக்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

குமராட்சி அருகே குடிநீர் தொட்டி அமைக்கக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-21 22:00 GMT

காட்டுமன்னார்கோவில்,

குமராட்சி அருகே சர்வராஜன்பேட்டை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் ஒரு பகுதியில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் மினிகுடிநீர் தொட்டி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதையறிந்த மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் தெருவில் மினிகுடிநீர் தொட்டி அமைக்கக்கோரி திருச்சி–சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சர்வராஜன்பேட்டையில் நேற்று காலை காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த குமராட்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எங்கள் பகுதியில் 250–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்களுக்கு சரியான முறையில் குடிநீர் கிடைப்பதில்லை. எனவே வேறொரு இடத்தில் வைப்பதை எங்கள் பகுதியில் மினி குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து போலீசார், குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமாரிடம் இதுகுறித்து செல்போன் மூலம் தெரிவித்தனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார், மாரியம்மன் கோவில் பகுதியில் மினிகுடிநீர் தொட்டி வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்