திருப்பூரில், நடுரோட்டில் பெண் கொடூரமாக வெட்டிக்கொலை

திருப்பூரில், நடுரோட்டில் பெண்ணை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவத்தில் 2–வது கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2017-11-21 23:00 GMT

திருப்பூர்,

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது 50). இவருடைய மனைவி தங்கம்மாள்(45). இவர்களுக்கு கீர்த்தனா, நந்தினி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் தங்கம்மாளுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். தற்போது தங்கம்மாளின் 2 மகள்களும் திருமணம் முடிந்து அவர்கள் திருப்பூர் முத்தையன் நகர் மேற்கு பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்கள்.

தங்கம்மாள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தை சேர்ந்த பொன்னையா என்கிற பாண்டி(46) என்பவரை 2–வதாக திருமணம் செய்துகொண்டு தூத்துக்குடியில் குடியிருந்து வந்துள்ளார். பின்னர் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட தங்கம்மாள் கடந்த 2 மாதமாக திருப்பூர் முத்தையன் நகரில் உள்ள தனது மகள்கள் வீட்டில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். பொன்னையாவும் திருப்பூர் வந்து கல்லாங்காட்டில் தங்கியிருந்துள்ளார். தன்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்த வருமாறு தங்கம்மாளை பொன்னையா பலமுறை அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் தங்கம்மாள் அவருடன் சேர்ந்து வாழ செல்லாமல் மகள்கள் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில் வழக்கம் போல் கட்டிட வேலைக்காக தங்கம்மாள் நேற்று காலை 8.30 மணி அளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு ராமையா கவுண்டர் லே அவுட் வழியாக நடந்து சென்றுள்ளார். அவருடன் வேலை செய்யும் சித்ரா என்ற பெண்ணும் உடன் சென்றுள்ளார். அந்த நேரத்தில் தங்கம்மாளை பின்தொடர்ந்து பொன்னையாவும் சென்றுள்ளார். தங்கம்மாளை வழிமறித்த அவர், தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு மீண்டும் அழைத்துள்ளார்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த பொன்னையா தான் வைத்திருந்த பையில் இருந்து அரிவாளை எடுத்து தங்கம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியதாக தெரிகிறது. இதில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் தங்கம்மாள் சரிந்தார்.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தங்கம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் கயல்விழி, உதவி கமி‌ஷனர் தங்கவேல், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நெல்சன், தென்னரசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

தங்கம்மாளை பொன்னையா கொடூரமாக வெட்டி விட்டு எந்த வழியாக தப்பினார்? என்பது குறித்து அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக உள்ள பொன்னையாவை பிடிப்பதற்கு 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தூத்துக்குடி, ராமநாதபுரம் விரைந்துள்ளது. இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காலை நேரத்தில் நடுரோட்டில் பெண் கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்