வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது மேலும் ஒருவருக்கு வலைவீச்சு

திருவண்ணாமலையில் வாலிபர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Update: 2017-11-21 22:15 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை சமுத்திரம் காலனி பாவாஜி நகரை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மகன் சக்திவேல் (வயது 21), கடந்த 19-ந் தேதி இரவு வ.உ.சி. நகர் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சக்திவேலை அடித்து கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் சக்திவேல் கொலை வழக்கு தொடர்பாக திருவண்ணாமலை வ.உ.சி. நகரை சேர்ந்த நாகராஜ் (24), கோவிந்தராஜ் (27), தட்சிணாமூர்த்தி (27), சுதாகர் (35), குருவி என்ற சரவணன் (30) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் தட்சிணாமூர்த்தி தலைமறைவாகிவிட்டார். மற்ற 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான தட்சிணாமூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.

போலீஸ் விசாரணையில், சக்திவேல் ஒரு பெண்ணை பார்ப்பதற்காக வ.உ.சி. நகர் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த நாகராஜ் உள்பட 5 பேர் சேர்ந்து சக்திவேலிடம் தகராறு செய்து கல்லால் தலையில் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்