ஊட்டி நகராட்சி இடத்தில் கட்டப்பட்ட கோவில் நுழைவுவாயிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

ஊட்டி நகராட்சி இடத்தில் கட்டப்பட்ட கோவில் நுழைவுவாயிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2017-11-21 22:30 GMT

ஊட்டி,

ஊட்டி நகராட்சி 33–வது வார்டு நொண்டிமேடு பகுதியில் 500–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 4 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நொண்டிமேடு பகுதியில் கோவில் நிர்வாகம் சார்பில், நுழைவு வாயில் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று நகராட்சி நிர்வாகம் சார்பில், நகராட்சி இடத்தில் சாலையின் குறுக்கே அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட அந்த நுழைவுவாயிலை இடிக்க பொக்லைன் எந்திரம் வரவழைக்கப் பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு கோவில் நுழைவுவாயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பணி நிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து நகராட்சி கமி‌ஷனர் (பொறுப்பு) ரவி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோவில் நுழைவு வாயில் அமைக்க உரிய அனுமதி பெற வேண்டும். அதற்கு விண்ணப்பம் கொடுங்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து கோவில் நுழைவுவாயில் கட்ட பயன்படுத்தப்பட்ட கட்டுமான கம்பிகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.

மேலும் செய்திகள்