வேலூர் அப்துல்லாபுரத்தில் விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் உள்ள விமானநிலையத்தில் விரிவாக்க பணிகள் குறித்து கலெக்டர் ராமன் நேற்று ஆய்வு நடத்தினார்.

Update: 2017-11-21 23:00 GMT
வேலூர்,

வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் பலஆண்டுகளாக செயல்படாமல் கிடக்கிறது. தற்போது விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து விமான போக்குவரத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக விமான நிலையத்தில் உள்ள ஓடுதளத்தில் மண்பரிசோதனை செய்யப்பட்டு விமானம் இறங்குவதற்கு தகுதியானதாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான போக்குவரத்து தொடங்குவது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி விட்டு சென்றுள்ளனர். ஆய்வின் முடிவில் வேலூர் வழியாக 2 சிறிய ரக விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அப்துல்லாபுரம் விமான நிலையம் 46 ஏக்கரில் அமைந்துள்ளது. விமான போக்குவரத்து தொடங்கினால் இந்த இடம் போதாது என்பதால் அருகில் உள்ள நிலங்களை கையகப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை அறிந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது. விமான போக்குவரத்து தொடங்கினால், விமான நிலையத்திற்கு வாகனங்களின் வரத்து அதிகமாக இருக்கும். எனவே அந்தப்பகுதியில் உள்ள சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும். இதற்கான பணிகள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக பொய்கையில் இருந்து பொய்கை மோட்டூர் வரையிலான 3 கிலோமீட்டர் தூர சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. அங்கு நேற்று புதர்களை அகற்றும் பணி நடந்தது. சாலைப்பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சாலைவிரிவாக்க பணியை கலெக்டர் ராமன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உதவி கலெக்டர் செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்