டெங்கு விழிப்புணர்வு பிரசுரங்களை கலெக்டர் லட்சுமி பிரியா வழங்கினார்

அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 469 மனுக்கள் பெறப்பட்டன. டெங்கு விழிப்புணர்வு பிரசுரங்களை கலெக்டர் லட்சுமி பிரியா வழங்கினார்.

Update: 2017-11-21 07:19 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 469 மனுக்களை நேரடியாக அளித்தனர்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் நிலவேம்பு கசாயத்தினை குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் அனைத்து பொதுமக்களுக்கும் கலெக்டர் வழங்கினார். மேலும், டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் கலெக்டர் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வழங்கினார். மனித உயிர்களை டெங்குவில் இருந்து பாதுகாத்திட வேண்டும், அதற்கு ஏ.டி.எஸ். கொசுக்களை ஒழித்திட வேண்டும், தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும், கழிவு நீர் தேங்குவதை அகற்றிட வேண்டும், குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடவேண்டும், நமக்கு எந்த நோய்கள் வந்தாலும் அரசு மருத்துவமனையை அணுகிட வேண்டும், டெங்குவை ஒழித்திட வேண்டும், நிலவேம்பு கசாயத்தை குடித்திட வேண்டும் ஆகிய வாசகங்கள் துண்டுபிரசுரங்களில் இடம் பெற்றிருந்தன.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புதிட்டம்) பாலாஜி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்