‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி

“சினிமாவில் பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்” என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்தார்.

Update: 2017-11-20 23:00 GMT
மும்பை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர், ராதிகா ஆப்தே. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சினிமாவில் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக சமீப நாட்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து நடிகை ராதிகா ஆப்தே மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். குறிப்பாக சினிமா உலகை பற்றி நான் பேசுகிறேன். இங்கு பாலியல் தொல்லைக்கு ஏராளமான ஆண்களும் உட்பட்டிருக்கின்றனர். இதனை வெளியே கொண்டு வர இது தான் சரியான தருணம். சினிமா மிகவும் வெளிப்படையாகி விட்டது. பல்வேறு பகுதிகளை சார்ந்தவர்களும் இங்கு வருகிறார்கள்.

பேராசைமிக்க சிலர், என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார்கள். சினிமாவை பொறுத்தமட்டில், நீங்கள் சுரண்டப்படுகிறீர்கள் என்றால், அவர்களுக்கு ‘நோ’ (இல்லை) என்று சொல்ல நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

சினிமாவில் உங்கள் திறமைக்கு ஏற்ற புகழை நீங்கள் பெறலாம். ஒருசிலர் வீட்டை விட்டு ஓடிவந்து சினிமாவில் வேலை செய்கிறார்கள். அவர்கள் தவறிவிழுவதற்கு என்று எதுவுமில்லை. சிறப்பான அமைப்பு, விதிமுறைகள் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை அவர்களுக்கு நன்கு உதவிசெய்யும்.

இவ்வாறு ராதிகா ஆப்தே தெரிவித்தார்.

சினிமாவில் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தும் நபர்களின் பெயர்களை பகிரங்கமாக அறிவிப்பதில் நடிகர், நடிகைகள் மத்தியில் பயம் நிலவுகிறதா? என்று கேட்டதற்கு, “ஆம், முதலாவதாக, ‘நான் சொன்னால் யார் நம்ப போகிறார்கள்?’ என்ற பயம் ஏற்படும். மேலும், எதிரே உள்ளவர் சமுதாயத்தில் மிக பெரிய ஆளாக இருந்தால், என்னுடைய புகார் கவனிக்கப்படாமலேயே போய்விடும். என்னுடைய கனவை அது சிதைத்துவிடும்” என்று ராதிகா ஆப்தே பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்