மனித மலக்கசடு சுத்திகரிப்பு மையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்

திருச்சி லிங்கம் நகரில் மனித மலக்கசடு சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2017-11-20 22:45 GMT
திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி, மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.

அப்போது திருச்சி மாநகராட்சி 60-வது வார்டு லிங்கம் நகரை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

மலக்கசடு சுத்திகரிப்பு மையம்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 6 வார்டுகளில் உள்ள மனித மலக்கசடுகளை தினமும் 10 லாரிகளில் ஏற்றிக்கொண்டு காமாட்சி அம்மன் சாலை வழியாக வந்து காசி விளங்கி ஆற்றுப்பாலம் அருகில் கட்டப்பட்டு வரும் மனித மலக்கசடு சுத்திகரிப்பு மையத்தில் கொட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கான பணியை தனியார் நிறுவனம் ஒன்று தொடங்கி உள்ளது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் ஒட்டு மொத்த குடியிருப்பு பகுதியே பாதிக்கப்படும். விவசாய நிலங்கள், நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படும். காமாட்சி அம்மன் கோவில் தெரு, வள்ளலார் நகர், லிங்கம் நகர், செல்வா நகர், மங்கள் நகர், சுப்பிரமணிய நகர், எஸ்.பி.ஐ. காலனி மற்றும் அறவானூர் கிராமம் வரை சுமார் 10 ஆயிரம் குடியிருப்புகளில் ஆழ்குழாய் மூலம் பெறப்படும் நீர் கொடிய நச்சுத்தன்மை உடையதாக மாறி விடும். மக்கள் சுவாசிக்கும் காற்றே மாசுபட்டு விடும். எனவே இதனை தடுத்து நிறுத்த வேண்டும். குடியிருப்பு பகுதியில் இதனை அமைக்க கூடாது. மேலும் மீன்மார்க்கெட் இந்த பகுதியில் அமைக்கப்பட்டு வருவதால் சுகாதார கேடு ஏற்படும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

வேடம் அணிந்து வந்தனர்

மக்கள் சேவை இயக்கத்தின் அகில இந்திய தலைவர் தங்க சண்முகசுந்தரம், மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விவசாயிகள் பிரச்சினைகள் தொடர்பாக மனு கொடுக்க வந்தனர். நாட்டின் முதுகெலும்பு போன்ற விவசாயிகளை மத்திய அரசு அலைக்கழித்து வருவதை விளக்கும் வகையில் வேற்றுக்கிரக வாசி போல் ஒருவர் வேடம் அணிந்தும், அவரை கயிறு கட்டி இழுத்து வரும் ஒருவர் சாட்டையால் அடிப்பது போன்றும் வேடம் அணிந்து வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், விவசாய விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் கூடுதலாக 50 சதவீதம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும், கடன்களில் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை வழங்க வேண்டும், விவசாயிகள் தொடர் தற்கொலைக்கு தீர்வு காண வேண்டும், போலி உரம் வினியோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

செட்-டாப் பாக்ஸ் பிரச்சினை

5 முறை தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று வரும் செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியை அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் ரூ.1 கோடியே 60 லட்சத்தில் விரிவாக்கம் செய்வதற்கு வசதியாக மாநகராட்சி பொது கழிப்பிடத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும், என்று கோரி தண்ணீர் அமைப்பின் செயலாளர் நீலமேகம் மனு கொடுத்தார். வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர், அரசு வழங்கும் இலவச செட்-டாப் பாக்சை கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் பயனாளிகளுக்கு வழங்க மறுப்பது. தனியார் செட்-டாப் பாக்ஸ் வாங்க கோரி கட்டாயப்படுத்துவது பற்றியும், மாத சந்தா அரசு நிர்ணயித்ததை விட அதிகம் வசூலிப்பதை கண்டித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இது சம்பந்தமாக கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரியும் மனு கொடுத்தனர். 

மேலும் செய்திகள்