டியூப் லைட்டை உடைத்து கழுத்தில் குத்திக்கொண்டார் போலீஸ் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி

திரு.வி.க. நகர் போலீஸ் நிலையத்தில் டியூப் லைட்டை உடைத்து கழுத்தில் குத்தி வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால் அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-20 23:15 GMT
பெரம்பூர்,

பெரம்பூரை அடுத்த திரு.வி.க. நகர் காமராஜர் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 28). இவருக்கு எஸ்தர் என்ற மனைவியும், இரண்டு மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு திரு.வி.க. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது நள்ளிரவில் தனியாக சுற்றித்திரிந்த சரவணனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் மீது கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி என பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும் திரு.வி.க. நகர், செம்பியம் பகுதிகளில் பல்வேறு சங்கிலி பறிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சரவணனிடம் போலீசார் விசாரணை நடத்திக்கொண்டு இருந்தனர். அப்போது சரவணன் திடீரென டியூப் லைட்டை உடைத்து கழுத்தில் குத்தி தற்கொலைக்கு முயற்சித்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி டியூப்லைட்டை பறித்தனர்.

இருப்பினும் சரவணன் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சரவணனின் மனைவி மற்றும் உறவினர்கள் நேற்று காலை போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் சரவணனை காண்பிக்காமல் போலீசார் அலைக்கழித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சரவணனின் மனைவி, தனது குழந்தை மற்றும் உறவினர்களுடன் திரு.வி.க. நகரில் உள்ள பல்லவன் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்த செம்பியம் போலீஸ் உதவி கமிஷனர் அர்னால்ட் ஈஸ்டர், இன்ஸ்பெக்டர்கள் தமிழ்வாணன், ஜெகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சரவணனை நேரில் பார்க்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

உடனே நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சரவணனை உறவினர்களிடம் காண்பித்தனர். பின்னர் சரவணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்