குடிசை வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஊழியர் கைது

குடிசை வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-11-20 23:00 GMT
ஆற்காடு,

ஆற்காட்டை அடுத்த காவனூர் அருகே உள்ள புங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். கூலி தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 25) தனது குடிசை வீட்டிற்கு ஒருமுனை மின் இணைப்பு பெற காவனூரில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

அவரிடம் மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் ரூ.3 ஆயிரத்து 300 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. தன்னால் அவ்வளவு பணம் தர முடியாது என கூறியதால் ரூ.1,700 தரும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும் லஞ்சம் தர விரும்பாத புவனேஸ்வரி அது குறித்து வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.

அவரிடம் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூ.1,700-ஐ கொடுத்தனுப்பினர். அந்த பணத்தை புவனேஸ்வரி மின் வாரிய அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த மின்வாரிய வணிக உதவியாளர் நந்தகுமார் (42) என்பவரிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜய், விஜயலட்சுமி உள்பட 13 பேர் கொண்ட குழுவினர் காவனூர் மின்வாரிய அலுவலகத்திற்கு விசாரணை நடத்தினர். பின்னர் நந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்