கர்நாடகத்தில் எக்காரணம் கொண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து விடக்கூடாது

கர்நாடகத்தில் எக்காரணம் கொண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று முதல்–மந்திரி சித்தராமையா பேசினார்.

Update: 2017-11-19 23:38 GMT

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்–மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் மற்றும் கட்சியின் தலைவர்கள், இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து முதல்–மந்திரி சித்தராமையா பேசியதாவது:–

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். அவர் ஒரு இரும்பு பெண்மணி. வாஜ்பாய் கூட இந்திரா காந்தியின் உறுதியான நடவடிக்கைகளை பாராட்டினார். ஜனநாயகம், சமூகநீதிக்கு அவர் அதிக அழுத்தம் கொடுத்தார். பசி, பட்டினி, வறுமையை ஒழிக்க செயல் திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார்.

அவருடைய திட்டங்களை தழுவி அன்ன பாக்ய, மலிவு விலை இந்திரா உணவகம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். ஜனவரி மாதம் முதல் மாநிலத்தின் அனைத்து மாவட்ட, தாலுகா தலைநகரங்களிலும் இந்திரா உணவகத்தை திறக்க உள்ளோம். மாநிலம் முழுவதும் 500 உணவகங்கள் திறக்கப்பட உள்ளன.

பெங்களூருவில் திறக்கப்பட்டுள்ள உணவகங்களில் இதுவரை 1 கோடி பேர் உணவு சாப்பிட்டுள்ளனர். கர்நாடகத்தை பசி இல்லாத மாநிலமாக உருவாக்கி வருகிறோம். மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஒரே மாதிரியான ‘யுனிவர்சல்‘ மருத்துவ சுகாதார காப்பீட்டு திட்டத்தை விரைவில் அமல்படுத்த இருக்கிறோம்.

இவை அனைத்தும் இந்திரா காந்திக்கு பிடித்தமான திட்டங்கள் ஆகும். காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் பசி இல்லாத கர்நாடகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். பா.ஜனதாவினருக்கு அரசியல் சாசனத்தின் அர்த்தமே புரியவில்லை. அந்த கட்சியினருக்கு மனிதாபிமானமே இல்லை.

பொய் சொல்லிக்கொண்டு சுற்றுகிறார்கள். சித்தராமையா ஊழல்வாதி என்று சிறைக்கு சென்று வந்தவர்கள் சொல்கிறார்கள். மதவாத கட்சியான பா.ஜனதா எக்காரணம் கொண்டும் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பா.ஜனதாவினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இந்த தீயசக்திகளுக்கு எதிராக நாம் போராட வேண்டியது அவசியம்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.


மேலும் செய்திகள்