ஒரே மோட்டார் சைக்கிளில் 58 ராணுவ வீரர்கள் பயணித்து உலக சாதனை

பெங்களூருவில், ஒரே மோட்டார் சைக்கிளில் 58 ராணுவ வீரர்கள் பயணித்து நேற்று புதிய உலக சாதனை படைத்தனர். இந்த உலக சாதனை ‘கின்னஸ்‘ புத்தகத்தில் இடம்பெறுகிறது.

Update: 2017-11-19 23:36 GMT

பெங்களூரு,

இந்திய ராணுவத்தின் பயிற்சி மையமான ஏ.எஸ்.சி. (ஆர்மி சர்வீஸ் கார்ப்ஸ்) பெங்களூருவில் உள்ளது. இந்த மையத்தில் ஏராளமான ராணுவ வீரர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த மையத்தில் உள்ள ‘டர்னடோஸ்‘ குழுவில் உள்ள ராணுவ வீரர்கள் மோட்டார் சைக்கிள் சாகசங்கள் செய்து வருகிறார்கள். இந்திய ராணுவத்தின் ‘டர்னடோஸ்‘ குழுவின் 54 ராணுவ வீரர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று ஏற்கனவே உலக சாதனை படைத்தனர். இந்த உலக சாதனையை இந்திய ராணுவத்தின் ‘ஆர்மி சிக்னல் கார்ப்ஸ்‘ குழுவினர் கடந்த 2013–ம் ஆண்டு உடைத்தனர். அவர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் 56 பேர் பயணம் செய்து உலக சாதனை படைத்தனர்.

இந்த உலக சாதனையை முறியடித்து ‘கின்னஸ்‘ சாதனை படைக்க ‘டர்னடோஸ்‘ குழுவினர் முடிவு செய்தனர். இதற்கான பயிற்சியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மனதளவிலும், உடல் அளவிலும் தங்களை தயார்படுத்தி கொண்டனர். கடந்த 6 மாதங்களாக அவர்கள் முழு உத்வேகத்துடன் சாதனை படைக்கும் நோக்கத்தில் பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தனர். ஏ.எஸ்.சி. பயிற்சி மையத்தின் கமாண்டோவும், லெப்டினன்ட் ஜெனரலுமான விபன் குப்தா, ஏ.எஸ்.சி. (வடக்கு) மையத்தின் ‘பிரிகாடியர்‘ அசோக் சவுத்ரி ஆகியோரின் ஆதரவுடன், மேஜர் பன்னி சர்மா தலைமையில் இவர்கள் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், நேற்று பெங்களூரு எலகங்கா விமான நிலையத்தில் சாகச பயணம் செய்து உலக சாதனை படைப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, 500 சி.சி. கொண்ட பழமையான மோட்டார் சைக்கிள் ஒன்றில் ‘டர்னடோஸ்‘ குழுவை சேர்ந்த ராணுவ வீரர்கள் சாதனை பயணத்தை தொடங்கினார்கள். சாகச பயணத்தில் ஈடுபட்ட வீரர்கள் இந்திய தேசிய கொடியின் வண்ணங்களை குறிக்கும் விதமாக இளஞ்சிவப்பு, வெள்ளை, பச்சை நிற டி–சர்ட்டுகள் மற்றும் ஹெல்மெட்டுகள் அணிந்திருந்தனர்.

மோட்டார் சைக்கிளை ராணுவ வீரர் சுபீதார் ராம்பால் யாதவ் ஓட்டினார். தொடக்கத்தில் சுமார் 30 வீரர்கள் மோட்டார் சைக்கிளில் பயணிக்க, அதைத்தொடர்ந்து ஓடும் மோட்டார் சைக்கிளில் தலா 2 வீரர்களாக அடுத்தடுத்து ஏறினார்கள். இவ்வாறாக மொத்தம் 58 ராணுவ வீரர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி பயணித்தனர். அவர்கள், 1.20 கிலோ மீட்டர் தொலைவை 2 நிமிடம் 14 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தனர்.

உலக சாதனை படைத்ததை தொடர்ந்து அங்கு கூடியிருந்த ராணுவ வீரர்கள், ராணுவ அதிகாரிகள், மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட வீரர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினார்கள். ஒரு மோட்டார் சைக்கிளில் 58 ராணுவ வீரர்கள் பயணித்ததன் மூலம் ‘டர்னடோஸ்‘ குழுவின் சாதனை ‘கின்னஸ்‘, ‘லிம்கா‘, ‘யூனிக்யூ‘ ஆகிய புத்தகங்களில் இடம் பெற உள்ளது.

மேலும் செய்திகள்