முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரிய–ஆசிரியைகள் 4 பேர் பணி இடைநீக்கம்

போலி ஆவணங்களை சமர்ப்பித்து முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரிய–ஆசிரியைகள் 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2017-11-19 23:22 GMT

சிக்கமகளூரு,

கர்நாடகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு மாநில அரசு சார்பில் இலவச ‘ஷூ’க்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ‘ஷூ’க்களை சம்பந்தப்பட்ட அரசு பள்ளியில் ஆசிரியராகவும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராகவும் பணிபுரிந்து வருபவர்தான் வாங்க வேண்டும் என்று கூறி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தாவணகெரே மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் மாணவ–மாணவிகளுக்கு ‘ஷூ’க்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், தாவணகெரே மாவட்டம் கைதாலா, மலலேகெரே, குட்டதபாதஹள்ளி, ஹொன்னூர் ஆகிய 4 கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ‘ஷூ’க்களின் விலை மற்ற பள்ளிகளில் குறிப்பிடப்பட்டிருந்த விலையை விட அதிகமாக இருந்தது. இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி கோதண்டராமனுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அதிகாரி கோதண்டராமனின் உத்தரவின்பேரில், இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கைதாலா கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த யசோதம்மா, மலலேகெரே கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த சதீஷ், குட்டதபாதஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த லக்கப்பா, ஹொன்னூர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த நாகரத்தனம்மா ஆகிய 4 பேரும் குறைந்த விலையிலான ‘ஷூ’க்களை வாங்கி, அவை கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டதுபோல் போலி ஆவணங்களை தயார் செய்து சமர்ப்பித்து இருந்தது தெரியவந்தது.

இதுமட்டுமல்லாமல் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில் ஆசிரியைகள் யசோதம்மா, நாகரத்தனம்மா, ஆசிரியர்கள் சதீஷ், லக்கப்பா ஆகியோர் கமி‌ஷன் அடிப்படையில் குறைந்த விலையிலான ‘ஷூ’க்களை தங்களுக்கு நெருங்கியவர்கள் வைத்திருக்கும் காலணிகள் விற்பனை கடைகளில் வாங்கி, பின்னர் அவற்றுக்கான விலையை கூடுதலாக குறிப்பிட்டு ஆவணங்களை தயார் செய்திருப்பதும், பின்னர் அவற்றை கல்வித்துறையில் சமர்ப்பித்து முறைகேடு செய்திருப்பதும் தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக அவர்கள், கடை உரிமையாளர்களிடம் பேசிய செல்போன் உரையாடல்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து அதிகாரிகள் இதுகுறித்து அறிக்கையை மாவட்ட கல்வித்துறை அதிகாரி கோதண்டராமனிடம் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் அதிகாரி கோதண்டராமன் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் நேற்று முன்தினம், முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியைகள் யசோதம்மா, நாகரத்தனம்மா, ஆசிரியர்கள் சதீஷ், லக்கப்பா ஆகிய 4 பேரையும் பணி இடைநீக்கம் செய்து அதிகாரி கோதண்டராமன் உத்தரவிட்டார்.

மேலும் அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அரசு பள்ளி ஆசிரியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்