குண்டும், குழியுமான சாலையில் உருளுதண்டம் போட்ட வாலிபர் பொதுமக்கள் மறியல்–பரபரப்பு

சேலம் குகை பகுதியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி, அந்த சாலையில் வாலிபர் உருளுதண்டம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

Update: 2017-11-19 23:00 GMT

சேலம்,

சேலம் மாநகராட்சி 47–வது வார்டுக்கு உட்பட்ட குகை பெரியார் வளைவு அருகில் முள்ளுவாடி அம்பேத்கர் தெரு உள்ளது. இந்த பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாததால் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சிதறி கிடப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும், சைக்கிள், மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடையும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இந்த சாலையை சீரமைக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில், முள்ளுவாடி அம்பேத்கர் தெருவை சேர்ந்த வாலிபர் பார்த்திபன் தலைமையில் 50–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரியும், நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது குண்டும், குழியுமான அந்த சாலையில் பார்த்திபன் படுத்து உருளுதண்டம் போட்டபடி பெரியார் வளைவு மெயின்ரோட்டிற்கு வந்தார். அதே பகுதியை சேர்ந்த சிலர் அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆதரவு தெரிவித்து சாலையை சீரமைக்கக்கோரி கோ‌ஷங்களை எழுப்பினர். இதையடுத்து பார்த்திபன் மற்றும் பொதுமக்கள் திருச்சி மெயின்ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்த செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பார்த்திபன் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் செந்தில் மற்றும் அதிகாரிகளும் அங்கு வந்தனர். அப்போது, பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெறுவதால் சாலையை சீரமைக்க முடியவில்லை என்றும், இருப்பினும் உடனடியாக பழுதடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.

இதனால் பொதுமக்கள் சமாதானம் அடைந்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், மழை பெய்தால் சாக்கடை கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்து விடுவதாகவும், அந்த சமயத்தில் வி‌ஷ பூச்சிகள் வீட்டிற்குள் வருவதால் அச்சத்துடன் வசிக்க வேண்டி உள்ளதாகவும், எனவே, சாக்கடை கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த பிரச்சினையும் மாநகராட்சி ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்