கணவன்– மனைவியை கட்டிப்போட்டு நகை– பணம் கொள்ளை மர்மநபர்களை போலீஸ் தேடுகிறது
தூத்துக்குடியில் கணவன்– மனைவியை கட்டிப்போட்டு நகை– பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கைவரிசை காட்டி விட்டு தப்பிச் சென்ற மர்மநபர்களை போலீஸ் தேடுகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மணிநகரை சேர்ந்தவர் பொன்னம்பலம் (வயது 87). மணிநகர் பகுதியில் திருமண மண்டபம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராமலட்சுமி (77). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மணிநகரில் திருமண மண்டபத்தின் வளாகத்தில் அமைந்துள்ள வீட்டில் பொன்னம்பலம், மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த மண்டபத்தின் காவலாளியாக விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (45) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணி அளவில் மாரியப்பன் டீ குடிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது 21 வயது முதல் 26 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு வந்தனர். அதில் 2 பேர் இளஞ்சிவப்பு நிறத்தில் டிசர்ட்டும், பேண்டும் அணிந்து இருந்தனர். அவர்கள் பொன்னம்பலத்தை சந்தித்து, தங்களுக்கு திருமண மண்டபம் வாடகைக்கு வேண்டும் என்று கூறினார்கள். இதனால் அவர்களை வீட்டின் உள்ளே அழைத்து சென்று பொன்னம்பலம் பேசினார்.
அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது, 3 வாலிபர்களும் திடீரன்று பொன்னம்பலத்தை பிடித்து வாயை பொத்தினார்கள். தாங்கள் முன்னேற்பாடாக கொண்டு வந்த செல்லோடேப்பை வைத்து கை, கால்களை சுற்றி ஒட்டி கட்டினர். வாயிலும் செல்லோடேப்பை ஒட்டினர். அங்கிருந்து சமையல் அறைக்கு சென்றனர். அங்கு இருந்த ராமலட்சுமியையும் பிடித்து கை, கால்களை சுற்றி செல்லோடேப்பை ஒட்டி கட்டினர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். வீட்டில் இருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து, அதில் இருந்த சுமார் ரூ.48 ஆயிரம் பணத்தையும் எடுத்துக் கொண்டனர்.
அப்போது டீ குடிக்க சென்ற மாரியப்பன் திருமண மண்டபத்துக்கு வந்தார். இதனை கண்ட மர்ம நபர்கள் 3 பேரும் வீட்டில் இருந்து தப்பி ஓடினர். அவர்களை மாரியப்பன் பிடிக்க முயன்றார். அதற்குள் 3 பேரும் அவரை தள்ளி விட்டு தப்பிச் சென்றனர்.
வீட்டுக்குள் சென்ற மாரியப்பன், செல்லோடேப்பால் கட்டப்பட்டு கிடந்த பொன்னம்பலம், ராமலட்சுமி ஆகிய 2 பேரையும் மீட்டார். இதுதொடர்பாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பார்த்திபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்பநாய் கோகோ வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் ராஜாஜி பூங்கா நீர்த்தேக்க தொட்டி வழியாக சென்று வி.வி.டி. சிக்னல் அருகே நின்று விட்டது. இதனால் கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. கைரேகை நிபுணர்கள், வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.