எத்தனை சதி திட்டம் தீட்டினாலும் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க முடியாது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
எத்தனை சதி திட்டம் தீட்டினாலும் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க முடியாது என முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சிவகங்கை,
சிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் அரசு கலை கல்லூரி மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. அரசு துறை செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார்.
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, பள்ளி கல்வித்துறை, பொதுப்பணித்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.34.07 கோடி மதிப்பீட்டில் 127 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை வருடம் முழுவதும் கொண்டாட வேண்டும் என்று மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியிருந்தார். அவரது விருப்பப்படி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மதுரையில் தொடங்கி தற்போது வரை சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் ஆசி பெற்றவர்களே தமிழகத்தை ஆள்வார்கள். இங்கு மேடையில் இருப்பவர்களில் 100–க்கு 90 பேர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். விவசாயிகள் என்ன நினைக்கிறார்களோ அதுவே தமிழகத்தில் நடக்கிறது. மக்களின் விருப்பப்படியே கட்சியும், ஆட்சியும் செயல்பட்டு வருகிறது.
மக்கள் ஒத்துழைப்பின்படி ஆட்சி சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. நான் கடந்த 1974–ல் அ.தி.மு.க.வில் இணைந்தேன். அன்றிலிருந்து தற்போது வரை கட்சிக்காக அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். கழகத்திற்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் இருந்த காரணத்தால் தான் தற்போது இந்த முதல்–அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. 43 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் தான் எனக்கு இந்த பதவி கிடைத்துள்ளது.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நடத்துவதன் முக்கிய நோக்கமே அவருடைய புகழை மக்களுக்கு எடுத்துரைப்பது தான். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் மக்களுக்காக பல்வேறு நன்மைகளை செய்துள்ளார். அவர் எப்படி மக்களுக்கு திட்டங்களை வகுத்து செயல்படுத்தினாரோ, அதுபோல் ஜெயலலிதாவும் மக்களுக்கான பல திட்டங்களை செய்திருந்தார்.
அந்த திட்டங்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலன் அடைந்துள்ளனர். மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளோம். ஆனால் எதிர்க்கட்சிகள் நாங்கள் எதுவுமே செய்யாததுபோல் பொய் புகார்களை கூறி வருகிறார்கள். புளுகுமூட்டைகளை அள்ளி வீசி கொண்டிருக்கிறார்கள். இதையே வாடிக்கையாகவும் வைத்திருக்கிறார்கள். என்ன முயற்சி செய்தாலும் தோல்வியில் தான் முடியும்.
தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் சட்டம்–ஒழுங்கு கெட்டுக் கிடந்தது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது. சட்டம்–ஒழுங்கு கெட்டு விட்டதுபோல் தோற்றத்தை எதிர்க்கட்சியினர் உருவாக்கி வைத்துள்ளனர். பொய் குற்றச்சாட்டுகளை கூறி மக்களை குழப்ப பார்க்கிறார்கள். கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் சட்டம்–ஒழுங்கு சம்பந்தமாக தமிழகத்தில் 14 ஆயிரத்து 583 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 6 ஆண்டுகளில் 12,128 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுபோல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் குற்றங்கள் என எல்லாவற்றிலும் தி.மு.க. ஆட்சியில் தான் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் நிலை குலைந்திருந்த சட்டம்–ஒழுங்கு, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் சரிசெய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்–ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதாக தி.மு.க. கூறுகிறது. அவர்களுக்கு ஊழல் மட்டும் தான் தெரியும். அதனால் தான் அவர்களுக்கு ஊழல் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் செய்த நலத்திட்டங்கள் எதிர்க்கட்சியினருக்கு தெரியவில்லை. மக்களின் குறைகள் என்ன என்பதை அறிந்து அதற்கு ஏற்றார்போல் ஆட்சியாளர்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். எந்த துறையிலும் குறைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. எத்தனை சதி திட்டம் தீட்டினாலும் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க முடியாது. பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஆட்சியை கவிழ்க்கப் பார்க்கிறார்கள். அவர்களின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது.
சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. குழந்தை இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவில் முதல் இடத்தில் தமிழகம் இருக்கிறது. மருத்துவத்துறையில் மைல் கல்லை தமிழகம் எட்டியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் மாவட்ட கலெக்டர் லதா நன்றி கூறினார்.