ஞாபகமறதிக்கு அரண் போடும் ‘திருமணம்’
‘டிமென்சியா’ எனப்படும் ஞாபகமறதி நோய்க்குத் தடைபோடக்கூடியது திருமணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
லவ்பேரப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்த ஆய்வாளர்கள், திருமணமும், நெருங்கிய நண்பர்களை கொண்டிருப்பதும், ஞாபகமறதி நோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்க உதவலாம் என்று கூறுகின்றனர்.
வயதுவந்தோர் 6 ஆயிரத்து 677 பேரை 7 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, ‘ஜர்னல்ஸ் ஆப் ஜெரண்டாலஜி’ என்ற இதழில் வெளியிடப் பட்டுள்ளது.
அர்த்தமுள்ள சமூகத் தொடர்புகளைப் பராமரிப்பதற்கும், அவர்கள் விருப்பம்போல வாழ்க்கையைத் தொடர்வதற்கும் ‘டிமென்சியா’வால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு அளிப்பது முக்கியமானது என்கிறார்கள் அந்த ஆய்வாளர் கள்.
அத்துடன், ஒரு நபர் தொடர்புவைத்திருக்கும் சமூக வட்டத்தின் அளவை விட அதன் தரமே மிக முக்கியமானது எனத் தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வைத் தொடங்கியபோது, இதற்கு உட்பட்டோர் யாருக்கும் ‘டிமென்சியா’ இருக்கவில்லை. ஆனால், தொடர் கண்காணிப்பின்போது, 220 பேருக்கு அந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
டிமென்சியா ஏற்படுவதற்கான தாக்கத்தை சமூக வாழ்க்கை எப்படி உண்டாக்குகிறது என்பதை அறியத் தரும் துப்புகளைக் கண்டறிய டிமென்சியா உள்ளவர்களுக்கும், இல்லாதவர் களுக்கும் இடையிலான அறிகுறிகளை ஆய்வாளர்கள் ஒப்பிட்டுப் பார்த்தனர்.
அதன் முடிவில், நல்ல நட்புச்சூழல் உள்ளவர் களுக்கு டிமென்சியா தாக்கும் வாய்ப்புக் குறைவு என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கின்றனர். நண்பர்கள் என்று வருகிறபோது, நண்பர்களின் எண்ணிக்கையல்ல, நெருக்கம்தான் முக்கியமானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
“நீங்கள் மக்களால் சூழப்பட்டிருக்கலாம். ஆனால், எவ்வளவு பேரிடம் மிகவும் நெருங்கிய நட்புக் கொண்டிருக்கிறீர்களோ, அந்தத் தரம்தான் டிமென்சியா உருவாகும் ஆபத்தைக் குறைக்கிறது. மாறாக, அதிகம் பேரிடம் நட்புக் கொண்டிருக்கும் எண்ணிக்கை அல்ல” என்று பேராசிரியர் ஈப் ஹோகர்வோஸ்ட் கூறுகிறார்.
மோசமான உடல்நலத்தோடு தொடர்புடையதாக இருக்கும் மன அழுத்தப் பாதிப்பின் சக்தியைக் குறைக்கும் சாதனமாக நெருங்கிய நட்பு வட்டாரம் உள்ளது என்கிறார் அவர்.
டிமென்சியா ஆபத்தை ஏற்படுத்தும் குறிப்பிட்ட இந்த அம்சங்களை மாற்றியமைத்துக்கொள்ளலாம் என்றும், இது 35 சதவீதம் வரையிலான ஆபத்துக்கே வழிவகுக்கிறது என்றும், மற்ற 65 சதவீத டிமென்சியா ஆபத்து, மாற்ற முடியாத காரணங்களால் ஏற்படுவதாகவும் கருதப்படுகிறது.
திருமணம் செய்தவர்களைவிட, தனியாக வாழ்பவர்களுக்கு டிமென்சியா ஏற்படும் ஆபத்து இரு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
எந்த வகையில் பார்த்தாலும், தனிமை என்பது டிமென்சியாவுக்கு ஓர் உண்மையான பிரச்சினையாக உள்ளது என்று டாக்டர் பிரவுன் கூறுகிறார்.