கர்நாடகத்தில் 5 நாட்களாக நடைபெற்று வந்த தனியார் டாக்டர்கள் போராட்டம் வாபஸ்

முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கர்நாடகத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த தனியார் டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.

Update: 2017-11-18 00:15 GMT
பெலகாவி,

கர்நாடக அரசு, தனியார் மருத்துவமனைகள் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.

அதில் முக்கியமாக, மருத்துவ சிகிச்சைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்தல், மருத்துவமனைகள் மீது புகார் தெரிவிக்க மாவட்டங்களில் குழு அமைப்பது, தவறு செய்யும் டாக்டர்களுக்கு சிறை தண்டனை வழங்குதல், நோயாளி மரணம் அடைந்தால் பிணத்தை வைத்துக்கொண்டு, சிகிச்சை கட்டணத்தை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது, உடனே பிணத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இதற்கு கர்நாடக தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 13-ந் தேதி பெலகாவியில் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் அந்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த திருத்த மசோதாவில் இடம் பெற்றுள்ள அம்சங்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனியார் டாக்டர்கள் கடந்த 13-ந் தேதி முதல் பெலகாவியில் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பேச்சுவார்த்தை கூட்டம் பெலகாவி சுவர்ண சவுதாவில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை மந்திரி ரமேஷ்குமார், சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா, பொதுப்பணித்துறை மந்திரி மகாதேவப்பா, இந்திய மருத்துவ சங்க கர்நாடக மாநில தலைவர் டாக்டர் ரவீந்திரா தலைமையில் டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. இதில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்தும் சட்டம் கடந்த 2007-ம் ஆண்டு இயற்றப்பட்டது. அந்த சட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும், சாமானிய மக்களின் நலனை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த சட்டத்தில் நாங்கள் திருத்தம் செய்தோம். அந்த மசோதா கடந்த முறை பெங்களூருவில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

உறுப்பினர்கள் சந்தேகம் தெரிவித்ததை அடுத்து அந்த மசோதா சட்டசபையின் கூட்டு குழுவுக்கு அனுப்பப்பட்டது. அந்த குழுவில் அனைத்துக்கட்சிகளின் உறுப்பினர்களும் இடம் பெற்று இருந்தனர். அந்த குழு ஒரு அறிக்கையை தயாரித்து சபாநாயகரிடம் வழங்கியது. இந்த நிலையில் அந்த மசோதாவை பெலகாவி கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம்.

ஆனால் தனியார் டாக்டர்கள் கடந்த 13-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அன்றைய தினமே டாக்டர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினேன். அப்போது, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும்படி கூறினேன். மீண்டும் ஒரு முறை உங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு அந்த மசோதாவை நிறைவேற்றுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்தேன். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் முக்கிய மந்திரிகளுடன் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) நான் ஆலோசனை நடத்தினேன். இன்று (நேற்று) போராட்டம் நடத்தும் டாக்டர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினேன். இதில் டாக்டர்கள் பல்வேறு சந்தேகங்கள், ஆதங்கம், பயங்களை தெரிவித்தனர். அதற்கு நாங்கள் சில விளக்கங்களை எடுத்துக் கூறினோம். மேலும் அந்த திருத்த மசோதாவில் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளோம். இதை டாக்டர்கள் ஒப்புக்கொண்டனர்.

டாக்டர்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் இல்லை. சாமானிய மக்களின் நலனை காக்க வேண்டும் என்பது தான் அரசின் முக்கிய நோக்கம். இதில் எந்தவித சமரசத்திற்கும் இடம் இல்லை. இந்த திருத்த மசோதாவால் டாக்டர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. டாக்டர்கள் போராட்டத்தால் நோயாளிகள் சிலர் மரணம் அடைந்துவிட்டதாக நீங்கள் (நிருபர்கள்) சொல்கிறீர்கள். அதற்கு உங்களிடம் ஆதாரங்கள் உள்ளதா?.

அதே போல் இந்தியாவிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் ‘யுனிவர்சல்‘ சுகாதார காப்பீட்டு திட்டத்தை நாங்கள் அறிமுகம் செய்ய உள்ளோம். இதனால் மாநில மக்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்பட்டால் தரமான சிகிச்சை பெற அது பெரும் உதவியாக இருக்கும். சாமானிய மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதை எங்கள் அரசு உறுதி செய்கிறது.

இந்த டாக்டர்கள் போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்தன. சிலர் எரிகிற தீயில் குளிர்காய முயற்சி செய்தார்கள். ஏனென்றால் சட்டசபை தேர்தல் நெருங்குவதால் அவர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டனர். நாங்கள் அதற்கு இடம் கொடுக்க மாட்டோம்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

இதைதொடர்ந்து இந்திய மருத்துவ சங்க கர்நாடக மாநில தலைவர் டாக்டர் ரவீந்திரா கூறுகையில், “எங்களது சந்தேகங்களுக்கு முதல்-மந்திரி விளக்கம் அளித்தார். அவர் சந்தேகங்களை போக்கியுள்ளார். முதல்-மந்திரி கூறிய விவரங்கள் எங்களுக்கு திருப்தியாக உள்ளது. இதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

நாங்கள் நடத்திய போராட்டத்தால் சில நோயாளிகள் இறந்துவிட்டதாக கூறுகிறீர்கள். அவ்வாறு யாராவது உயிரை விட்டிருந்தால், அந்த பாவம் என்னை தாக்கட்டும். நாங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம். நாளை (இன்று) முதல் பணிக்கு திரும்புகிறோம். முதல்-மந்திரிக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கிறோம்“ என்றார்.

கர்நாடகத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த தனியார் மருத்துவமனை டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இன்று (சனிக்கிழமை) முதல் அவர்கள் பணிக்கு திரும்புகிறார்கள். பெங்களூருவில் மட்டும் நேற்று டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றதால், அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் பிரிவு வழக்கம் போல் செயல்பட்டது. அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் அங்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.

தனியார் மருத்துவமனையை ஒழுங்குப்படுத்தும் மசோதாவில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும் என்று சித்தராமையா சொல்ல மறுத்துவிட்டார். வருகிற 20-ந் தேதி சட்டசபையில் அந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும், அப்போது என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவரும் என்றும் சித்தராமையா கூறினார். அந்த மசோதாவில் டாக்டர்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் அம்சம் நீக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

இதற்கு பதிலாக 3 முறை புகாருக்கு உள்ளாகும் தனியார் மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்யும் அம்சம் சேர்க்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்