மின் கம்பி உரசியதால் லாரி தீப்பிடித்து டிரைவர் கருகி சாவு

நள்ளிப்பட்டு அருகே பிளாஸ்டிக் குழாய்கள் ஏற்றி வந்த மினி லாரி மின் கம்பியில் உரசியதில் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இதில் டிரைவர் உடல் கருகி இறந்தார்.

Update: 2017-11-17 23:20 GMT

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள சின்னராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் டில்லிபாபு. விவசாயி. இவர் தனது மாந்தோப்பில் தண்ணீர் பாய்ச்ச தேவையான பிளாஸ்டிக் குழாய்களை வாங்குவதற்கு காஞ்சீபுரம் சென்றார்.

பிளாஸ்டிக் குழாய்களை ஒரு மினி லாரியில் ஏற்றிக்கொண்டு அவர் ஊர் திரும்பினார். லாரியை காஞ்சீபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 32) ஓட்டி வந்தார். அதில் வேலூர் மாவட்டம் விஷாரம் பகுதியை சேர்ந்த கிளீனர் முன்னா (27) உடன் வந்தார்.

டில்லிபாபுவின் மாந்தோட்டத்துக்கு லாரி நேற்று மாலை சென்றது. அங்கு லாரியை பின்னால் நகர்த்த கிளீனர் முன்னா கீழே நின்று குரல் கொடுத்தார். லாரியை டிரைவர் ராஜேஷ் பின்னால் நகர்த்தியபோது மேல் பகுதியில் உள்ள மின்கம்பி லாரியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து லாரி திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. டிரைவர் ராஜேஷ் தீயில் சிக்கி உடல் கருகி அதே இடத்தில் இறந்தார். லாரி முழுமையாக எரிந்து உருக்குலைந்தது.

இந்த விபத்து குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்