மக்களோடு தொடர்பில் இல்லாவிட்டால் கவர்னர் மாளிகை என்பது தனிமைச் சிறையாகி விடும் கிரண்பெடி பேட்டி

மக்களோடு தொடர்பு இல்லாவிட்டால் கவர்னர் மாளிகை என்பதுதனிமைச் சிறையாகி விடும் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

Update: 2017-11-17 23:30 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நேற்று குழந்தைகள் தினவிழா நடந்தது. விழாவிற்கு கவர்னர் கிரண்பெடி தலைமை தாங்கினார். விழாவில் தலைமை செயலாளர் அஸ்வனி குமார், கவர்னர் மாளிகையில் உள்ள அதிகாரிகள் மற்றும் மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

விழா முடிவில் கவர்னர் கிரண்பெடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

டெல்லியில் நடந்த மாநாட்டில் கவர்னர்கள் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் அறிவுறுத்தினர். கவர்னர்கள் மக்களுடன் தொடர்பில் இல்லாவிட்டால் எதற்காக அவர்களுக்கு பெரிய மாளிகை கொடுக்கப்பட்டுள்ளது. மக்களோடு தொடர்பில் இல்லாவிட்டால் கவர்னர் மாளிகை என்பது தனிமைச் சிறையாகிவிடும்.

மக்களுடனும், அதிகாரிகளுடனும் தொடர்பில் இருப்பதே கவர்னர்களின் வேலை. அந்த வகையில் தமிழக கவர்னர் ஆய்வு செய்வதற்கு அதிகாரம் உள்ளது. கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்றால் எதற்காக கோப்புகள் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு அரசு அதிகாரிகளும் மக்களுடன் தொடர்பில் இருப்பதும், அவர்களுக்கு சேவை செய்வதும் அவர்களுடைய கடமை ஆகும். இது கவர்னருக்கும் பொருந்தும்.

பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் உள்ளது. அதை நீதிமன்றம் முடிவு செய்யும். புதிய தலைமை செயலர் அஸ்வனி குமார் திறமை வாய்ந்தவர். அவர் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் செயல்படக்கூடியவர். அவர் புதுச்சேரிக்கு தலைமை செயலாளராக வந்திருப்பது மக்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசில் கவர்னர் தலையிடும் நோய் தற்போது தமிழகத்திலும் பரவியுள்ளது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறியதை நானும் அறிவேன். ஆனால், அவர் கூறியது என்ன நோய் என்று எனக்கு தெரியவில்லை.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.

மேலும் செய்திகள்