உதவித்தொகை வழங்கக்கோரி சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தை முதியோர்கள் முற்றுகை

உதவித்தொகை வழங்கக்கோரி சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தை முதியோர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-11-17 22:30 GMT

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகாவுக்கு உள்பட்ட சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, தாளவாடி, கடம்பூர், பவானிசாகர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான முதியோர்கள் தங்களுக்கு அரசின் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் எனக்கோரி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இவர்கள் யாருக்கும் முதியோர் உதவித்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் சத்தியமங்கலம் தாலுகாவுக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 750–க்கும் மேற்பட்ட முதியோர்கள் பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமையில் ஒன்று திரண்டு நேற்று பகல் 11 மணி அளவில் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுபற்றி அறிந்ததும் கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினார். அப்போது அவரிடம் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் கூறுகையில், ‘சத்தியமங்கலம் தாலுகாவுக்கு உள்பட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான முதியோர்கள் தங்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் எனக்கோரி விண்ணப்பித்து உள்ளனர்.

ஏற்கனவே முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கடந்த 31–5–2017 அன்று சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தை முதியோர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நீங்கள் (ஆர்.டி.ஓ. கோவிந்தராஜ்) விண்ணப்பம் குறித்து உரிய விசாரணை நடத்தி முதியோர் உதவித்தொகை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தீர்கள். உங்களுடைய உறுதிமொழியை ஏற்று முதியோர்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனால் இதுவரை முதியோர் உதவித்தொகை வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தான் மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். உடனடியாக முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

இதைத்தொடர்ந்து கோபி ஆர்.டி.ஓ. கூறுகையில், ‘சத்தியமங்கலம் தாலுகாவில் முதியோர் உதவித்தொகை கேட்டு 848 விண்ணப்பங்கள் வந்து உள்ளன. இதில் 640 விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு 411 விண்ணப்பங்கள் முதியோர் உதவித்தொகை வழங்க தகுதி உடையதாக கண்டறியப்பட்டு உள்ளது. மீதம் உள்ள விண்ணப்பங்களும் ஆய்வு செய்யப்பட்டு தகுதி உடைய முதியோர்கள் கண்டறியப்படுவார்கள். தற்போது தகுதி உடையவர்களாக கண்டறியப்பட்டு உள்ளவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க நிதி இல்லை. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு முதியோர் உதவித்தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். இதில் சமாதானம் அடைந்த முதியோர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு மதியம் 1 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சத்தியமங்கலம் தாலுகா அலுவலக பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்