ஈரோடு அருகே டேங்கர் லாரி மீது பஸ் மோதல்; வடமாநில தொழிலாளி உடல் நசுங்கி சாவு
ஈரோடு அருகே டேங்கர் லாரி மீது பஸ் மோதிய விபத்தில் வடமாநில தொழிலாளி உடல் நசுங்கி செத்தார். இந்த விபத்தில் டிரைவர், கண்டக்டர் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
பவானி,
சேலத்தில் இருந்து கோவைக்கு 4 வழிச்சாலை உள்ளது. இந்த 4 வழிச்சாலையின் நடுவில் அரளி செடிகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த அரளி செடிகளுக்கு தனியார் நிறுவனம் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. இதற்காக லாரி ஒன்று 4 வழிச்சாலையில் மெதுவாக நகர்ந்து செல்லும்போது அதன் பின்புறத்தில் உள்ள பம்பரில் நின்றபடி ஊழியர் ஒருவர் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம்.
அதன்படி நேற்று லாரியில் இருந்து குழாய் மூலம் அரளி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணி நடந்தது. இந்த பணியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ரகு (வயது 45) என்பவர் ஈடுபட்டு கொண்டிருந்தார். லாரியை பெருந்துறை அருகே உள்ள கந்தாம்பாளையத்தை சேர்ந்த பெருமாள் (53) என்பவர் ஓட்டினார். லாரி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் சேலத்தில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று காலை புறப்பட்டது. பஸ்சை நாமக்கல் மாவட்டம் நல்லூரை சேர்ந்த முருகசுந்தரம் (40) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சமயனூரை சேர்ந்த பச்சமுத்து என்பவர் இருந்தார். பஸ்சில் 50–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் பகல் 11 மணி அளவில் ஈரோட்டை அடுத்த கங்காபுரம் மேடு அருகே வந்தபோது அரளி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ்சும், லாரியும் 150 அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டு ரோட்டோரம் இறங்கி நின்றது.
இந்த விபத்தில் லாரியின் பின்புறத்தில் நின்று தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த ரகு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி செத்தார். மேலும் இந்த விபத்தில் பஸ்சின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியதுடன் அதில் இருந்த டிரைவர் முருகசுந்தரம், கண்டக்டர் பச்சமுத்து மற்றும் பஸ்சில் இருந்த பயணிகளான கோவையை சேர்ந்த அம்சவேணி (48), பிரியா (20), ராதாகிருஷ்ணன் (42), நாகராஜ் (30), சேலத்தை சேர்ந்த எலிசபெத் ராணி (62), பிலோமினா (71), சரசு (40), கிரிஜா (30), சூர்யா (23), தயாளன் (30), லாரி டிரைவர் பெருமாள், பிரமிளா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் பஸ்சில் இருந்த பயணிகள் அய்யோ, அம்மா என்று அலறினார்கள்.
இதை கண்டதும் அங்கிருந்தவர்கள் ஓடோடி வந்து விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் ஈரோடு, பவானி, குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து 108 ஆம்புலன்சுகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. உடனே படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.