ஊத்துக்கோட்டை அருகே மந்திரவாதியை தாக்கிய கார் டிரைவர் கைது

ஊத்துக்கோட்டை அருகே மந்திரவாதியை தாக்கிய கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-11-16 23:39 GMT

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பனப்பாக்கம் சின்ன காலனியை சேர்ந்தவர் நித்யானந்தம் (வயது 43). கார் டிரைவர். இவரது மகன் சக்திவேல் (வயது 22). சென்னை மாநில கல்லூரியில் படித்து வருகிறார். இவர் ஒரு மாத காலமாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகவில்லை.

இந்த நிலையில் நித்யானந்தம் தன்னுடைய மகனை கரடிபுத்தூர் பகுதியில் உள்ள மந்திரவாதி ராஜேந்திரன் (53) என்பவரிடம் அழைத்து சென்றார். ராஜேந்திரன் நாட்டு வைத்தியமும் செய்து வந்தார். சக்திவேலை தன்னிடம் விட்டு செல். அவரை ஒரு வாரத்தில் குணமாக்கிவிடுகிறேன் என்று ராஜேந்திரன் கூறவே நித்யானந்தம் தன்னுடைய மகனை அங்கு விட்டு சென்றார்.

இந்த நிலையில் ஒரு வாரம் கழித்து நேற்று நித்யானந்தம் மந்திரவாதி ராஜேந்தினின் வீட்டுக்கு சென்றார். அங்கு சென்ற போது தன்னுடைய மகன் சக்திவேல் மனநிலை பாதிக்கப்பட்டதை போல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை பார்த்து நித்யானந்தம் கதறி அழுதார். தன்னுடைய மகனுக்கு பில்லி, சூனியம் வைத்து விட்டாயே என்று கூறியவாறு மந்திரவாதி ராஜேந்திரனை உருட்டுக்கட்டையால் தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இது குறித்து ஊத்துக்கோட்டை சப்–இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குப்பதிவு செய்து நித்யானந்தத்தை கைது செய்தார்.

மேலும் செய்திகள்