பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் குடும்பத்துடன் தலைமறைவு பொதுமக்கள் போலீசில் புகார்

திருப்பூரில் ஏலச்சீட்டு மற்றும் பலகார சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து குடும்பத்துடன் தலைமறைவானவர் மீது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.

Update: 2017-11-16 23:00 GMT
அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). இவருடைய மனைவி சூரியா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நாகராஜ் அவருடைய வீட்டு கட்டிடத்தில் சிறிய பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பலகார சீட்டு மற்றும் ஏலச்சீட்டும் நடத்தி வந்துள்ளார்.

இவரிடம், வெங்கமேடு, செட்டிபாளையம், இந்திராநகர், ஆத்துப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏலச்சீட்டு மற்றும் பலகார சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக நாகராஜ் சீட்டு பணத்தை சரியாக கொடுத்து வந்துள்ளார். இதை நம்பி கடந்த ஆண்டும் ஏராளமானோர் பலகார சீட்டில் சேர்ந்து வாரம் ரூ.100 வீதம் 52 வாரம் பணம் கட்டி உள்ளனர். ஒருசிலர் ஒருபெயரில் 10 சீட்டிற்கும் பணம் கட்டியதாக தெரிகிறது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு சீட்டிற்கு பணம் கட்டியவர்கள் நாகராஜிடம் சென்று சீட்டு பணத்தை கேட்டுள்ளனர். அவர் ஒரு வாரத்திற்குள் தருவதாக கூறி உள்ளார். பின்னர் மீண்டும் அவர்கள் சென்று கேட்டபோது பணம் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சீட்டு பணத்தை கேட்பதற்காக நாகராஜ் வீட்டிற்கு சிலர் சென்றுள்ளனர். அப்போது அவருடைய வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான் அவர் தனது குடும்பத்துடன் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து நேற்று காலை நாகராஜிடம் சீட்டிற்கு பணம் கட்டி ஏமாந்த பெண்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் நாகராஜ் வீட்டை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் இது தொடர்பாக புகார் அளிக்குமாறு அவர்களிடம் தெரிவித்தார். இதில் நாகராஜ் பலகார சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி சுமார் ரூ.10 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்தது தெரிய வந்தது.

மேலும் சீட்டிற்கு பணம் கட்டியவர்கள் பணம் கொடுக்குமாறு நெருக்கியதால் குடும்பத்துடன் தலை மறைவானதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்