கோவையில் கவர்னர் ஆய்வு: ‘மாநில உரிமையை பறிக்கும் செயல்’ ஜான் பாண்டியன் கண்டனம்
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் பாளையங்கோட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
நெல்லை,
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் பாளையங்கோட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பட்டியல் இனத்தில் உள்ள பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், வாதிரியார், தேவேந்திரகுலத்தார் என அழைக்கப்படும் சாதிப்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வேண்டும். தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். தேவேந்திரகுல வேளாண் மக்கள் மற்றும் விவசாயிகளை ஒருங்கிணைத்து ‘வேளாண் மரபினர்‘ என்ற தனிப்பிரிவை உருவாக்கி தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமம்தோறும் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடத்த முடிவு செய்துள்ளோம். வருகிற 30–ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இதன் தொடக்க விழா நடக்கிறது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோவையில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்து இருக்கிறார். இதுபோன்ற சம்பவம் இதுவரை தமிழகத்தில் நடந்தது இல்லை. இந்த சம்பவம் மாநில அரசின் உரிமையை பறிப்பது போல் உள்ளது. கவர்னர் ஆய்வு நடத்தியது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு ஜான்பாண்டியன் கூறினார்.