தனியார் நிதிநிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை

வேலூரில் வங்கி கணக்கில் பணம் இலலாமல் காசோலைகள் திரும்பியதால் தனியார் நிதி நிறுவனத்தை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-11-16 00:20 GMT

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சர்வீஸ் ரோட்டில் (அணுகுச்சாலை) தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, தினசரி மற்றும் மாத சீட்டுகள் எனப் பல்வேறு வகையான சீட்டுகள் நடத்தப்படுகிறது. அதில், வேலூர் மட்டுமின்றி பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் சீட்டுக்கட்டி (சீட்டுப்பணம்) வருகின்றனர். ஒருநாளைக்கு ரூ.300 முதல் ரூ.1,500 வீதம் வரை பொதுமக்கள் பல லட்சம் ரூபாய் சீட்டுக்கட்டி உள்ளனர்.

சீட்டுக்கட்டி முடித்தவர்களுக்கு நிதி நிறுவனம் காசோலைகளை வழங்கி உள்ளது. அந்தக் காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது நிதி நிறுவன கணக்கில் பணம் இல்லாமல் காசோலைகள் திரும்பி வந்துள்ளது. இந்த விவரம், தற்போது சீட்டுக்கட்டி வருகின்ற பொதுமக்களுக்கு தெரிய வந்தது.

இதனால் தாங்கள் இதுவரை கட்டிய பணத்தையாவது வாங்கி செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் 50–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்கனவே சீட்டுக்கட்டி முடித்தவர்களுக்கு கொடுத்த காசோலை திரும்பி வந்து விட்டதால், தாங்கள் இதுவரை கட்டிய பணத்தை திருப்பி தருமாறு அவர்கள் கேட்டனர்.

அப்போது ஒருவர் தனது மகள் திருமணம் நடைபெற இருப்பதால் பணத்தை உடனே வழங்க வேண்டும், இல்லையென்றால் இங்கேயே நான் தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறினார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி பொதுமக்களை சமாதானம் செய்தனர்.

அப்போது சீட்டுக்கட்டிய அனைவருக்கும் உரியமுறையில் பணம் திருப்பித்தரப்படும் என்று நிதி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தச் சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்