அவுரங்காபாத், அகமத்நகர் மாவட்டங்களில் விவசாயிகளின் போராட்டத்தில் திடீர் வன்முறை

அவுரங்காபாத், அகமத்நகர் மாவட்டங்களில் கரும்புக்கு லாபகரமான விலை நிர்ணயிக்க கோரி விவசாயிகள் மேற்கொண்ட போராட்டத்தில் திடீர் வன்முறை ஏற்பட்டது.

Update: 2017-11-15 23:11 GMT

மும்பை,

அவுரங்காபாத், அகமத்நகர் மாவட்டங்களில் கரும்புக்கு லாபகரமான விலை நிர்ணயிக்க கோரி விவசாயிகள் மேற்கொண்ட போராட்டத்தில் திடீர் வன்முறை ஏற்பட்டது. நிலைமையை சமாளிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

கரும்புக்கு குவிண்டலுக்கு ரூ.3 ஆயிரத்து 100 விலை நிர்ணயம் செய்ய கோரி, அவுரங்காபாத் மற்றும் அகமத்நகர் மாவட்டங்களில் விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று அவுரங்காபாத் மாவட்டம் சேவ்காவ் பகுதியில் விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து வந்த போலீசார், விவசாயிகளை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், கலைந்து செல்ல மறுத்த விவசாயிகள், போலீசாரை நோக்கி கற்களை வீசினர். மேலும், அங்கு நின்ற பஸ்சை தீ வைத்து எரித்தனர். இதனால், அந்த பஸ் தீயில் கருகி உருக்குலைந்து போனது.

நிலைமையை சமாளிப்பதற்காக விவசாயிகளை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசினர். மேலும், துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர். இதனால், போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.

இதேபோல், அவுரங்காபாத் மாவட்டம் பைதான் பகுதியிலும் விவசாயிகளின் போராட்டத்தில் வன்முறை தொற்றிக்கொண்டது. விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், போலீசாரை நோக்கி கற்களை வீசியதால், நிலைமைய சமாளிக்க போலீசார் தடியடி நடத்தினர்.

இந்த வன்முறையில் 2 விவசாயிகளும், சில போலீசாரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உள்ளூர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவங்கள் குறித்து அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்