காஞ்சீபுரம் மாவட்டத்தில் மணல் கடத்தல்; 25 பேர் கைது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு லாரி, 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 22 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2017-11-15 23:01 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கிஷோர்குமாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார்.

அப்போது அங்கு மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கையை சேர்ந்த சிவகுமார்(வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

காஞ்சீபுரம் அடுத்த பனப்பாக்கம் ஜங்சன், கீழ்கதிர்ப்பூர் பகுதியில் பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது பனப்பாக்கம் ஜங்சன் வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தார். அதில் லாரியில் மணல் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து சென்னை செங்குன்றத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராஜி (51) என்பவரை போலீசார் கைது செய்தனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் கீழ்கதிர்பூர் பகுதியில் நடந்த வாகன சோதனையின் போது, மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்த குப்பன்(42), வாசுதேவன்(22), தாமோதரன்(35), சதீஷ்(28), மற்றொரு குப்பன்(57), செல்வராஜ்(60), காசி(46), தேவராஜ் என்ற செந்தில்(37), பழனி(34), சிவா(25), சிவராமன் (20), பெருமாள்(24), காஞ்சனா(20), மாரி(42), சுதாகர்(30), சுதா(39), முத்து(37), சித்தேரிமேடு கிராமத்தை சேர்ந்த கங்காதரன்(37), விநாயகபுரத்தை சேர்ந்த புண்ணியகோட்டி(46), சாய்கணேஷ்(20), தேசம்மாள் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

வாலாஜாபாத் அருகே உள்ள முத்தியால்பேட்டையில் வாலாஜாபாத் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்தி வந்த தேனம்பாக்கத்தை சேர்ந்த பார்த்திபன்(21), தயாளன்(25) ஆகிய 2 பேரை கைது செய்தார். அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்