சுடுகாட்டில் குப்பைகளை கொட்டி ஆக்கிரமிப்பு: இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் மக்கள் திணறல்

திருபுவனை சுடுகாட்டில் குப்பைகள் கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியால் மக்கள் திணறி வருகின்றனர்.

Update: 2017-11-15 22:15 GMT

திருபுவனை,

புதுவை மாநிலம் திருபுவனையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு கொம்யூன் அலுவலகம், போலீஸ் நிலையம் என பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த மக்கள் இறந்தால் அவரது உடலை புதைப்பதற்கு ஒரு இடமும், எரியூட்டுவதற்கு என்று தனியாக ஒரு இடமும் உள்ளது.

திருபுவனை கொம்யூன் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் சுடுகாட்டு பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய போதுமான இடவசதி இல்லை. மேலும் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையும் மோசமாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வில்லியனூர் அருகே மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் திருபுவனையை சேர்ந்த பரத்குமார் (18), அமரன் (25) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இவர்களின் உடல் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று அடக்கம் செய்வதற்காக திருபுவனை சுடுகாட்டுக்கு உறவினர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.

சுடுகாடு பகுதியில் குப்பைகளின் ஆக்கிரமிப்பால் உடலை அடக்கம் செய்ய முடியாமல் உறவினர்கள் திணறினர். ஒரு இடத்தில் பள்ளம் தோண்டியபோது ஏற்கனவே புதைக்கப்பட்டவரின் எலும்புக்கூடு துர்நாற்றத்துடன் தென்பட்டது. இதையடுத்து சுடுகாட்டில் குவிக்கப்பட்டு இருந்த குப்பைகளை அகற்றிவிட்டு, மீண்டும் பள்ளம் தோண்டி இருவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து திருபுவனை கொம்யூன் பஞ்சாயத்து அலுவகத்துக்கு சென்று பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அங்கிருந்த கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் அலுவலர்களிடம், சுடுகாட்டு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய போதிய இடவசதி இல்லை. எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கவேண்டும். மேலும், இறந்தவர்களின் உடலை புதைக்க தேவையான இடத்தை ஒதுக்கித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர்.

மேலும் செய்திகள்