மரபணு மாற்ற பருத்தி விதை விற்பனையை அரசு அனுமதிக்க கூடாது விவசாய சங்க செயலாளர் பேட்டி

மரபணு மாற்ற பருத்தி விதை விற்பனையை அரசு அனுமதிக்க கூடாது என்று விவசாய சங்க செயலாளர் கூறினார்.

Update: 2017-11-15 23:00 GMT
பெரம்பலூர்,

தமிழ்நாடு வேளாண்மைபல்கலைக்கழகம், வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையம் சார்பில் பெரம்பலூர், திருச்சி, கடலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்ட விவசாயிகளுக்கு பருத்தியில் இளஞ்சிவப்பு, காய்ப்புழு மற்றும் பிற பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்த விழிப் புணர்வு கருத்தரங்கம் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசுகையில், தமிழ்நாட்டில் மானாவாரி பயிரான பருத்தி மற்றும் மக்காச்சோளம் பயிர் சாகு படியில், பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கின்றது. நடப்பாண்டில் மானாவாரி பயிர்களுக்கு உகந்த மழை மற்றும் சரியான தட்ப வெப்பநிலை நிலவுவதால், பருத்தி பயிர் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது நல்லநிலையில் உள்ளது. பூச்சி மருந்தினை தெளிக்கும் போது விவசாயிகள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் கோவை வேளாண்மை பல்கலைக்கழக பயிர் மரபியல் மற்றும் இனப்பெருக்கத்துறை இயக்குனர் கணேசமூர்த்தி, பயிர் பாதுகாப்புத்துறை இயக்குனர் ராமராஜ், ஆராய்ச்சி இயக்குனர் மகேஸ்வரன், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ரவி, வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் மெய்யழகன், வேளாண்மை இணை இயக்குனர் சுதர்சன், ராசி விதை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பி.டி. ரக பருத்திக்கு ஆதரவு தெரிவித்ததால் பரபரப்பு

கூட்டத்தின் போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. ரக பருத்திக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வேளாண் அதிகாரிகள் கருத்து கூறியதாக விவசாயிகள் குற்றசாட்டை முன்வைத்தனர். அப்போது அங்கிருந்த தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. ரக பருத்தியை பயிரிடும் விவசாயிகள் அந்த பருத்தி பயிரிலிருந்து விதைகள் எடுக்க முடியாது. மாறாக புதிதாக தான் அந்த விதைகளை வாங்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு பூச்சி தாக்குதல் இந்த பருத்தியில் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூட்டத்தில் கூட கருத்து தெரிவித்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பி.டி. ரக பருத்தியை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசு எதிர்த்தது. ஆனால் தற்போது ஜெயலலிதாவின் கொள்கையை பின்பற்றி வரும் தமிழக அரசு, தனியார் பருத்தி விதை நிறுவனத்தை முன்னிலைப்படுத்தி இந்த கருத்தரங்கை நடத்துவது கண்டிக்கத்தக்கது. மேலும் நிகழ்ச்சியின் போது பி.டி. ரக பருத்தி விற்பனைக்கு ஆதரவாக வேளாண் துறை அதிகாரிகள் பேசியது வருத்தம் அளிக்கிறது. எனவே மரபணு மாற்ற பருத்தி விதை விற்பனையை தமிழக அரசு அனுமதிக்க கூடாது. மேலும் தனியார் விதை நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் வேளாண் பல்கலைக்கழகம், வேளாண்துறை இதுபோன்ற கூட்டங்களில் பங்கேற்க செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்