ரே‌ஷன் கடையில் முறையாக மண்எண்ணெய் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி

ரே‌ஷன் கடையில் முறையாக மண்எண்ணெய் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

Update: 2017-11-15 21:45 GMT

கடத்தூர்,

கோபியில் உள்ள மொடச்சூர் ரோட்டில் கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனையாளர்கள் சங்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் ரே‌ஷன் கடை ஒன்றும் உள்ளது. இந்த ரே‌ஷன் கடையில் 1,600–க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி வருகிறார்கள். இதில் 600–க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் 3 லிட்டர் மண்எண்ணெய் வழங்கப்படுகிறது.

நேற்று காலை ரே‌ஷன் கடையில் மண்எண்ணெய் வழங்கப்பட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மண்எண்ணெய் வாங்குவதற்காக கேனுடன் ரே‌ஷன் கடைக்கு சென்றனர். அங்கு ஒரு ரே‌ஷன் கார்டுக்கு 2 லிட்டர் மண்எண்ணெய் வழங்கப்பட்டது.

அப்போது அங்கிருந்த ஊழியரிடம் பொதுமக்கள், ‘மாதா மாதம் ஒரு ரே‌ஷன் கார்டுக்கு 3 லிட்டர் மண்எண்ணெய் வழங்கப்படும். ஆனால் இந்த மாதம் ஏன் குறைவாக 2 லிட்டர் மண்எண்ணெய் வழங்கப்படுகிறது,’ என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த 30–க்கும் மேற்பட்டவர்கள் முறையாக மண்எண்ணெய் வழங்காததை கண்டித்து அங்குள்ள மொடச்சூர் ரோட்டில் சாலை மறியல் செய்வதற்காக வந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் குடிமைப்பொருள் வருவாய் ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘எங்களுக்கு வழக்கமாக 3 லிட்டர் மண்எண்ணெய் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று (அதாவது நேற்று) 2 லிட்டர் மண்எண்ணெய்தான் வழங்கப்படுகிறது. எங்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் மண்எண்ணெய் அளவை குறைக்காமல் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

இதற்கு அதிகாரிகள் பதில் அளிக்கையில், ‘இந்த மாதம் ரே‌ஷன் கடைக்கு குறைவாகத்தான் மண்எண்ணெய் வந்து உள்ளது. தகுதி உள்ள அனைவருக்கும் பரவலாக கிடைக்க வேண்டும் என்பதற்காக 2 லிட்டர் மண்எண்ணெய் வழங்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் (டிசம்பர்) 3 லிட்டர் மண்எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய சாலை மறியல் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்