பருவமழை பாதிப்புகளை தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் கலெக்டர் சுரேஷ்குமார் தகவல்

நாகை மாவட்டத்தில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாார் நிலையில் உள்ளன என்று கலெக்டர் சுரேஷ்குமார் கூறினார்.

Update: 2017-11-15 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித் திடலில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு பிரசார ரதம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு, பிரசார ரதத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு பரவாமல் தடுக்க மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்படுகிறது.

பாதுகாப்பு நடவடிக்கை

நாகை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் கொசு உற்பத்தியினால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில், களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களது பகுதியில் டெங்கு அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் போன்ற விழிப்புணர்வினை அப்பகுதி மக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர். களப்பணியாளர்களின் பணியினை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மண்டல அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

அரசு மருத்துவமனை, ஆரம்பசுகாதார நிலையங்களில் எந்நேரமும் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கின்ற வகையில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. மழையின் போது தங்கள் பகுதிகளில் நீர் தேங்கினாலோ, வடிகால்களில் உடைப்பு ஏற்பட்டாலோ உடனடியாக தங்கள் பகுதிக்குரிய மண்டல அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் சுரேஷ்குமார் பொதுமக்களிடம் வழங்கினார். இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் அசோகன், நாகை குடிநீர்த்திட்ட கோட்ட நிர்வாக பொறியாளர் ராமசந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் விழிப்புணர்வு பிரசார கலைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்