தஞ்சை வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்தில் ரூ.15 லட்சத்தில் குடிநீரில் குளோரின் கலக்கும் நவீன எந்திரம்

தஞ்சை வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்தில் ரூ.15 லட்சத்தில் குடிநீரில் குளோரின் கலக்கும் நவீன எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு தினமும் 2 கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது.

Update: 2017-11-15 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களுக்கு அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர தஞ்சை மாநகராட்சி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கொள்ளிடம் நீரேற்று நிலையத்தில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் தஞ்சை பள்ளிஅக்ரகாரம் வெண்ணாற்றுக்கரையில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு தஞ்சையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

நவீன எந்திரம்

குடிநீரில் குளோரின் கலப்பதற்காக வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்தில் 2 தொட்டிகள் அமைக்கப்பட்டு அதில் பிளச்சிங்பவுடரை கலந்து வினியோகிக்கப்பட்டது. இதனால் சில நேரங்களில் அளவு கூடுவதோ? அல்லது குறைந்தோ காணப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில், தற்போது அந்த முறையை மாற்றி நவீன எந்திரம் மூலம் குடிநீரில் குளோரின் கலப்பதற்காக ரூ.15 லட்சம் செலவில் 3 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. நவீன எந்திரம் மூலம் குளோரின் குடிநீரில் கலந்து வினியோகிக்கப்படுகிறது.

இந்த எந்திரத்தை மாநகராட்சி ஆணையர் வரதராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜகுமாரின், மாநகராட்சி மின் கண்காணிப்பாளர் தேவசத்தியராஜ், இளநிலை பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

2 கோடி லிட்டர் தண்ணீர்

பின்னர் மாநகராட்சி ஆணையர் வரதராஜ் கூறுகையில், “தஞ்சை மாநகரில் உள்ள மக்களுக்கு தினமும் 2 கோடி லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொள்ளிடம் நீரேற்று நிலையம் மூலம் 1 கோடியே 25 லட்சம் லிட்டரும், போர்வெல் மூலம் 75 ஆயிரம் லிட்டரும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தினமும் சராசரியாக 132 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்தில் எரிவாயு மூலம் குளோரின் கலக்கும் நவீன எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதே போல் போர்வெல் மூலம் எடுக்கும் தண்ணீரிலும் நவீன எந்திரம் மூலம் குளோரின் கலப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”என்றார். 

மேலும் செய்திகள்