வருங்கால சந்ததியினருக்கு தண்ணீரை சேமித்து வழங்குவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்; கவர்னர் பன்வாரிலால் புரோகித்

வருங்கால சந்ததியினருக்கு தண்ணீரை சேமித்து வைத்து வழங்குவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்று திருப்பூர் அருகே நடந்த மரக்கன்று நடும் விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

Update: 2017-11-15 23:30 GMT

திருப்பூர்,

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம், கிராமிய மக்கள் இயக்கம் ஆகியவற்றின் சார்பில் திருப்பூர் அருகே தொரவலூரில் ‘ஒருமுகம், ஒரு மரம்’ என்ற திட்டத்தின் கீழ் அடர்வனம் அமைப்பதற்கான மரக்கன்று நடும் விழா நேற்று காலை நடைபெற்றது. அங்குள்ள குட்டை அருகே 25 சென்ட் இடத்தில் 2 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் ‘மியாவாகி’ முறையில் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்ட தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பின்னர் அரச மரக்கன்றை நட்டு திட்டத்தை தொடங்கிவைத்தார்.

‘கிராமிய மக்கள் இயக்கத்தின் சார்பில் தமிழகத்தில் 7 கோடி மரக்கன்றுகள் நடும் திட்ட இலக்கை அடைய வாழ்த்துக்கள்’ என்று கவர்னர் வாழ்த்து செய்தி எழுதி கொடுத்தார். இதைத்தொடர்ந்து அருகில் உள்ள மண்டபத்தில் விழா நடந்தது.

விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:–

ஆண்டுதோறும் பெருகி வரும் மக்கள் தொகை, தொழிற்சாலைகளின் வளர்ச்சி போன்ற காரணங்களால், விவசாயத்தேவைக்கு தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும் என்றால் மழைநீர் சேகரிப்பு மிகவும் முக்கியம். வனத்தை காப்பது என்பது நீர்ப்பிடிப்பு பகுதிகளை நாம் காப்பதாகும். நமது முன்னோர்கள் மரங்களையும், நதியையும் தெய்வமாக வணங்கினார்கள். மரங்கள் நிலத்தடி நீரை சேமிக்கும் முக்கிய காரணியாக உள்ளது.

வனத்தை காக்கவும், மரக்கன்று வளர்ப்புக்கும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேசிய பசுமை இந்தியா திட்டத்தின்கீழ் பருவநிலை மாறுபாட்டை தடுப்பதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலை கழிவுகளால் நதிகள் மாசுபாடுவதை தடுக்க தீவிர கவனம் செலுத்தப்படுகிறது.

நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும், பெருகி வரும் மக்கள் தொகைக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்கும் மழைநீர் சேகரிப்பு அவசியம். விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் மழைநீர் சேமிப்பு திட்டத்தை உளப்பூர்வமாக ஏற்று செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை நன்கு பெய்துள்ளது. ஆனால் பெரும்பாலான மழைநீரை தேக்கி வைக்க முடியாமல் கடலில் கலந்து விட்டது. மழைநீர் வீணாகாமல் தடுப்பதற்கும், கடலில் கலக்காமல் இருப்பதற்காகவும் தொலைநோக்கு திட்டம் நமக்கு அவசியம்.

கிராமங்கள், தாலுகாக்கள் வாரியாக பொதுமக்கள், தனியார் அமைப்புகளுடன் சேர்ந்து இதை செய்ய வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு தண்ணீரை சேமித்து வைத்து வழங்குவது ஒவ்வொரு குடிமகன் மற்றும் பொது அமைப்புகளின் முக்கிய கடமையாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் தெய்வசிகாமணி பேசும்போது, தமிழகத்தில் வருகிற 5 ஆண்டுகளில் 7 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை விரைவாக நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தையும் இந்த ஒருமுறை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசும்போது, அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவதற்கு மாவட்ட கலெக்டர் மூலமாக தமிழக முதல்–அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டு விரைவுபடுத்தப்படும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக தமிழக முதல்–அமைச்சர் மூலம் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றார்.

விழாவில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, விஜயகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, திருப்பூர் சப்–கலெக்டர் ஷ்ரவன்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க பொருளாளர் தங்கராஜ், கிராமிய மக்கள் இயக்க நிர்வாகிகள் சம்பத்குமார், தர்மலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் பங்கேற்ற கவர்னர் பன்வாரிலால் புரோகித், ‘எல்லோருக்கும் வணக்கம்’ என்று தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார். பின்னர் ‘நன்றி வணக்கம்’ என்று உரையை முடித்தார். தமிழ் ஆசிரியரைக்கொண்டு தமிழ் கற்று வருவதாகவும், அடுத்த முறை விழாவுக்கு நான் வரும்போது தமிழில் உரையாற்றுவேன் என்றும் கவர்னர் தெரிவித்தார். இதற்கு விழாவில் பங்கேற்றவர்கள் கைதட்டி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள்.

மேலும் செய்திகள்