பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் பாண்டிய மன்னன் கோச்சடையான் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் பாண்டிய மன்னன் கோச்சடையான் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழனி,
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்காக புனரமைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அம்மன் கருவறை, வெளிப்புற சுவர்கள் சுத்தப்படுத்தப்பட்டு, வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை தொல்லியல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:–
‘பெரியநாயகி அம்மன் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் ஒன்றில் 12–ம் நூற்றாண்டின் எழுத்து வடிவிலும், மற்றொன்று 13–ம் நூற்றாண்டை சேர்ந்த எழுத்து வடிவமாகவும் உள்ளது. கல்வெட்டில் 12–ம் நூற்றாண்டு எழுத்து பாண்டிய மன்னன் கோச்சடையான் இந்த கோவிலுக்கு அளித்த நிலதானம் பற்றி குறிப்பிட்டுள்ளது.
மற்றொன்றில் கோவிலுக்கு பாண்டிய மன்னர்கள் நிலம் அளித்தது குறிப்பிட்டுள்ளது. கல்வெட்டுகள் தொடர்ச்சியாக இல்லாமல் மேலும் கீழுமாக, வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் உள்ளன. இதேபோல் யாகசாலை மேற்கு பகுதியில் உள்ள நாயக்கர் கால கல்வெட்டும் தொடர்ச்சியாக இல்லாமல் உள்ளது.
எனவே திருப்பணிகள் நடைபெற்றபோது கல்வெட்டுகள் இடம் மாறி இருக்கலாம். கருவறையில் மறைக்கப்பட்ட கல்வெட்டுகள் 1,000 ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து மேலும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது’.
இவ்வாறு அவர் கூறினார்.