கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை விசாரிக்க தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை விசாரிக்க நெல்லை குற்றப்பிரிவு போலீசாருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்ற பாலா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
நான் சென்னையில் வசித்து வருகிறேன். நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கந்துவட்டி கொடுமையால் இசக்கிமுத்து, அவருடைய மனைவி, 2 குழந்தைகள் தீக்குளித்து பலியானார்கள். இந்த சம்பவத்தை அறிந்த நான், ஒரு கார்ட்டூன் வரைந்து எனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டேன். அதில், முதல்–அமைச்சர், மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அரை நிர்வாண கோலத்தில் நின்று தீக்குளிப்பு சம்பவத்தை வேடிக்கை பார்ப்பது போல் சித்தரித்திருந்தேன்.
இதுகுறித்து நெல்லை கலெக்டர் அளித்த புகாரின் பேரில், என் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000–ன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த வழக்கில் என்னை போலீசார் கைது செய்தனர். என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள சட்டப்பிரிவின்கீழ் நான் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை. என்னை கைது செய்தது இயற்கை நீதிக்கு முரணானது. எனவே என் மீது போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.