மருத்துவ மாணவிக்கு மிரட்டல் விடுத்த நடிகை புவனேஸ்வரியின் மகன் கைது

‘முகத்தில் ஆசிட் வீசிவிடுவேன்’ என மருத்துவ மாணவிக்கு மிரட்டல் விடுத்த நடிகை புவனேஸ்வரியின் மகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2017-11-16 00:15 GMT

அம்பத்தூர்,

‘பாய்ஸ்’ ‘குண்டக்க மண்டக்க’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை புவனேஸ்வரி. இவர் சென்னை வளசரவாக்கம் எழில் நகரில் வசித்து வருகிறார்.

புவனேஸ்வரியின் மகன் மிதுன் சீனிவாஸ் (வயது 23). இவர் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் சட்ட கல்லூரியில் எல்.எல்.பி. படித்து வந்தார்.

இவருக்கும், அண்ணாநகர் தென்றல் காலனியை சேர்ந்த அனு (20) என்ற பெண்ணுக்கும் ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது.

அனு, தனியார் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நாளடைவில் இவர்களுடைய பழக்கம் மிகவும் நெருக்கமானது. பின்னர் மிதுன், அனுவிடம் தான் அவரை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் கேட்டார்.

ஆனால் அனு அதனை ஏற்க மறுத்துவிட்டார். ஆனாலும் மிதுன், அனுவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். மேலும் அவர் அனுவின் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார்.

இதனால் அனு, மிதுனுடன் பழகுவதை நிறுத்தி விட்டார். மேலும் ‘பேஸ்புக்கில்’ தனது நட்பு வட்டாரத்தில் இருந்து அவரை நீக்கிவிட்டார். இதில் கோபம் அடைந்த மிதுன், மீண்டும் அனுவின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டார்.

அப்போது மிதுன், அனுவிடம் ‘என்னை திருமணம் செய்துகொள்ளா விட்டால் உன் முகத்தில் ஆசிட் வீசிவிடுவேன்’ என மிரட்டியதாக தெரிகிறது. அதன்பின்னர் பலமுறை போனிலும் மிரட்டல் விடுத்து வந்தார்.

இது குறித்து அனு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மிதுனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

ஆதம்பாக்கத்தில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணை, வாலிபர் தீவைத்து எரித்து கொலை செய்தார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

மேலும் செய்திகள்