பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற வாலிபரை சினிமா பாணியில் பிடித்த போலீசார்
பூந்தமல்லி அருகே பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி செய்துவிட்டு மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்ற வாலிபரை போலீசார் சினிமா பாணியில் துரத்திச்சென்று மடக்கிப்பிடித்தனர்.
பூந்தமல்லி,
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் மல்லிகா (வயது 40). இவர் நேற்று முன்தினம் இரவு மவுண்ட் பூந்தமல்லி சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் மல்லிகா கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார்.
இதனால் பதறிப்போன மல்லிகா மற்றும் அருகில் இருந்தவர்கள் திருடன், திருடன் என கூச்சலிட்டனர். இதையடுத்து அந்த நபர்கள் மோட்டார்சைக்கிளில் தப்பிச்செல்ல முயன்றனர். அப்போது அம்பத்தூரில் உள்ள துணை கமிஷனர் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர்களுக்கான கூட்டத்தை முடித்து விட்டு குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தனது ஜீப்பில் குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பொதுமக்கள் சத்தத்தை கேட்டதும் முன்னால் வேகமாக சென்ற மோட்டார்சைக்கிளை துரத்தினார். சினிமா பாணியில் ஜீப்பில் விரட்டிச்சென்ற போலீசார் குமணன்சாவடி அருகே சென்றவுடன் மோட்டார்சைக்கிள் மீது ஜீப்பை லேசாக மோத செய்தனர். இதில் கீழே விழுந்த 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இருப்பினும் போலீசார் அவர்களை விரட்டிச்சென்று ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர். மற்றொருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசில் சிக்கியவரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இதையடுத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து கை, கால்களை சேர்த்து கட்டி போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர், பட்டாளத்தை சேர்ந்த இர்பான் (25) என்பதும், தனது நண்பருடன் சேர்ந்து அம்பத்தூர், அய்யப்பன்தாங்கல் பகுதிகளில் பெண்களிடம் தங்க சங்கிலி பறித்து வந்ததும், சில நாட்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இர்பானை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 பவுன் தங்கநகைகள் மற்றும் கத்தி, மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய அவரது நண்பரை தீவிரமாக தேடி வருகின்றனர்.